Wednesday, June 17, 2009

கவிதை

வேண்டுகோள்



மரணப்படுக்கையிலே மல்லாந்து படுத்துக்கொண்டு


மூச்சுவிட திணறுதிங்கே உலகம் - காரணம்


சாதிமத பேதமென்னும் கலகம்



கருவிழிகள் நீர்சொரிய காண்கின்றேன் சகமனிதன்


மனிதனையே வெடிவைத்து வெடிக்க - இதயம்


உடல்விட்டு வெளிவந்து துடிக்க



ஊர்போகும் பேருந்தின் உள்ளிருந்து திடுமென்று


தலை ஆறாய் உடல்நூறாய் சிதறும் - குழந்தை


கைபிய்ந்து கால்பிய்ந்து கதறும்



பழிவாங்கும் நோக்கோடு பைத்தியம்போல் அலைகின்றார்


அப்பாவிகளை வெறிகொண்டு தாக்க - இங்கு


யாருமில்லைமனிதநேயம் காக்க



ஒப்பாரிக்கு ஓய்வு தர உறுதிகொள் மனிதா


வெடிவைக்கும் மனப்போக்கை அழிக்க - இனி


அமைதிகொள் புவிப்பந்து செழிக்க



முயன்றால் முடியாதது ஏதுமில்லை தெரியாதா


மனது வை மனிதா அஃது முடியும் - நாளை


வன்முறையற்ற உலகம் விடியும்



மாந்த சமதளத்தில் வகுப்பின வரப்புகளை


அமைத்தபடி பிரிவினைகள் எதுக்கு - தகர்த்து


ஒற்றுமை சமபரப்பை செதுக்கு



பாபரோ ராமரோ பெயர் பிரித்து பார்க்காமல்


நட்பு கொண்டு நெஞ்சோடு இறுக்கு - உலகம்;


உய்த்தலில் உன் பங்கும் இருக்கு.


-புதுவைப் பிரபா -


கவிதையெனப்படுவது. . .



எழுத்துகளுக்கிடையில் எண்ணங்கள்


வார்த்தைகளுக்கிடையில் உணர்வுகள்


வரிகளுக்கிடையில் எதார்த்தங்கள்


நிறைத்து நிற்பது


நிதர்சன கவிதை



முதுகலை மாணவனோ


முறுக்குவிற்கும் மன்னாதனோ


யார் படித்தாலும் புரிவது கவிதை


விடுத்து-


புரியாத ஒன்று


கவிதை வேடம் கொண்டு வருமாயின்-


அதை தூக்கி எறியுங்கள்


தின்னட்டும் கழுதை



கவிதை-


ஒரு பெருங்கதை பேசும்செய்தியைக்கூட


இரண்டே அடிகளில்அடக்கிவிடும்


படிப்பவன் படித்துமுடிப்பதற்குள்ளே


மாற்றங்கள் நிகழ்த்ததொடக்கிவிடும்



கவிதை தேவை-


காதல் அணுக்களை உற்பத்தி செய்ய


மொழிக்கு அழகு செய் ஆடைகள் நெய்ய


மனிதனுக்குள்ளே மனிதம் வடிக்க


அவன் ஆறாவது அறிவை


சாணை பிடிக்க


கவிதை-


காதலர் கைகளில்


முத்தமாய் மாறும்


எதிரிக்கு எழுதும்போது


யுத்தமாய் மாறும்


இரங்கல் பாடுகையில்


கண்ணீராய் மாறும்


புரட்சி பாடுகையில்


செந்நீராய் மாறும்



நம்பிக்கை பாடும்போது


ஏணிவேடம் ஏற்கும்


நண்பருக்கு எழுதும்போது


நட்பு பூ பூக்கும்



பாடுபொருளின் தன்மையை பொறுத்து


கவிதை-


உளியாய் மாறும்


சில சமயம் உலகம் செதுக்க!


சில சமயம் பேரண்டம் பிளக்க!



-புதுவைப் பிரபா -









No comments:

Post a Comment