Friday, October 15, 2010

"சவால்" - சவால் சிறுகதை


சிவா கரையில் பைக்கோடு நின்றுகொண்டிருந்தான். காமினி கடல் அலைக்குள் விழுந்து அவளை முழுவதுமாக நனைத்துக்கொண்டிருந்தாள். ஈர வாட்ச்சை துடைத்து அவள் மணி பார்க்க முயன்றபோது இரண்டு முள்ளும் ஒரே நேர்கோட்டிலிருந்தது. அந்த நொடியில் திடீரென்று அவள் கண் முன் தோன்றிய மீனவக்கிழவனொருவன், அவளது கையில் மணிப்பர்ஸ் ஒன்றை திணித்துவிட்டு, ஒரு திசையில் ஓடி மறைந்தான்.
மணிப்பர்ஸை அழுத்திப் பார்த்து, புன்னகைத்த காமினி, அதை தன் பேன்ட்டிலிருந்த சீக்ரெட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொள்ள முயன்றாள். அது 'மினி'பர்ஸாக இருந்த காரணத்தினால் கச்சிதமாய் உள்ளே போய் ஒளிந்துக்கொண்டது. நிம்மதி பெருமூச்சு விட்டு, எகிறி எகிறி குதித்து சிவாவை நோக்கி கையசைத்தாள், காமினி.

சிவா தலையில் அடித்துக்கொண்டு பைக்கை கிளப்பி ' கடலோர காவல்படை' என்ற ஸ்ட்டிக்கரோடு சற்று தொலைவில் நின்றுக்கொண்டிருந்த ஜிப்சியை நெருங்கி, " சார்!. . . . சார்!. . . "என்று குரல் கொடுத்தான்.
கான்ஸ்டெபில் ஒருவர் திமிர்முறித்துக்கொண்டே எட்டிப்பார்த்து, "யாரு? ஏன்ன சார் வேணும்? "என்றார்.
"அந்த பாறை மேல ஒரு வயசுப்பொண்ணோட உடல்கிடக்கற மாதிரி தெரியுது. கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்". சிவா சொல்லிவிட்டு நகர்ந்து, ஒரு மரத்தடியில் பைக்கை ஆப் செய்துவிட்டு நின்றுகொண்டான்.
"அடச்சே! என்ன பொண்ணு இவ? இந்த டிராமாவெல்லாம் ஏன் எதுக்குன்னே சொல்லாம, கல்யாணத்துக்கும் இதுக்கும் ஒரு முடிச்சபோட்டுட்டு, நம்மல பேசவுடாம பண்ணிட்டாளே! எனக்கு ஒன்னுமே புரியலயே! ஏன்று புலம்பிவிட்டு, 'இப்போ இவள போலீஸ் எந்த ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறாங்களோ, அந்த ஆஸ்பிட்டலோட பின்புற கேட்ல நாம வெயிட் பண்ணனும் ' என்று அடுத்து அவன் செய்யவேண்டியதாக காமினி சொல்லியிருந்ததை ஒருமுறை நினைத்து முடித்தான்.
இரண்டு நிமிடத்தில் ஆம்புலேன்ஸ் அங்கு வந்து காமினியை தூக்கிக்கொண்டு பறந்தது. சிவா பின்தொடர்ந்தான்.

சியு-வில் நான்கைந்துபேரோடு காமினியும் கிடத்தப்பட்டிருந்தாள். காமினி லேசாக கண்திறந்து பார்த்தாள். அங்கிருந்த நர்ஸ் இருவர், ஏதோ ஒரு இயந்திரத்தை தூக்கிக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார்கள். அடுத்த நொடி அந்த அறையில் எஞ்சியிருந்த டூட்டி டாக்டரின் செல்போன் அலறியது. "எஸ். . ஸ்பீக்கிங்" என்று சொல்லிக்கொண்டே வார்ட்டைவிட்டு அந்த டாக்டர் அகன்றதும், காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கிவிட்டு, அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலை திறந்து வெளியே குதித்தாள்.

மருத்துவமனையின் பின்புற வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருந்த காமினி, ஒருமுறை அந்த 'மினி'பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு ஓடினாள்.
"என்ன காமினி இது? ஒரு மணி நேரமா நிக்கறேன். எதுக்கு இந்த விளையாட்டெல்லாம்? "பைக்கோடு நின்றிருந்த சிவா, எரிச்சலின் உச்சத்தில் கேட்டான்.
"அப்புறம் சொல்றேன். நீ முதல்ல வண்டிய எடு. "அவசரப்படுத்தினாள், காமினி.
பைக்கை வேகமாக ஓட்டத்தொடங்கியவன் அந்த தெருமுனையின் குறுக்குச் சந்தில் போய் நிறுத்தி, பைக்கின் டேங்க் கவரில் கையைவிட்டு வெளியே இழுத்தபோது, துப்பாக்கி ஒன்று அவன் கையோடு வந்தது.

"ஸாரி. . .எனக்கு வேற வழி தெரியல" என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான், சிவா. "சொல்லு..! "என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியை சற்று அழுத்தினான்.
" ச்சீ! காமெடி பண்ணாத சிவா..ஏது இது. உங்கப்பாகிட்டேர்ந்து 'சுட்டு'ட்டியா?. "
"அது இருக்கட்டும். காலையிலேர்ந்து என்ன நடந்துக்கிட்டிருக்கு? எதுக்கு அதிகாலையில போன்பண்ணி பீச்சுக்கு கூட்டிட்டு போகச்சொன்ன? அந்த தாத்தா உங்கிட்ட என்ன குடுத்தாரு? அத வாங்கிக்கிட்டு நீ ஏன் செத்த மாதிரி நடிச்ச? என்னை எதுக்கு போலீஸ்கிட்ட அப்படி சொல்லச்சொன்ன? இப்போ ஆஸ்பிட்டலேர்ந்து தப்பிச்சு எங்கபோற? சொல்லு காமினி. . .எனக்கு தலையே வெடிச்சுப்போகிறமாதிரி இருக்கு. "
"உங்க வீட்டுக்குத்தான் போகணும்." காமினி சொல்லி கண் சிமிட்டினாள். "விளையாடாத காமினி…"
"உண்மையாகவேதான். இந்த டிராமாவ உங்கப்பாத்தான் முடிச்சுவைக்கணும்"
"அப்பாவா? "
"அலறாத சிவா! "
"ஐயோ! உனக்கு கணவனாவறதுக்கு முன்னாடி மற கழன்டு பைத்தியமாயிடுவேன்போல இருக்கே! "
"பரவாயில்ல. அப்பவும் உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஏன்னா. . நான் ஒம்பைத்தியம். "

காமினியை 'கேட்'டிலேயே விட்டுவிட்டு, "நான் முதல்ல போறேன். கொஞ்ச நேரம் கழிச்சு நீ வா. எனக்கு பயமா இருக்குது. "என்ற சிவா, குழப்பத்தோடு வீட்டினுள் நுழைய முற்பட்டபோது அந்த வாக்கியங்கள் வந்து அவன் காதில் விழுந்தது.
"மரகதம். . .சிட்டிய ஒட்டிய கடல் பகுதியில கள்ள கடத்தல் நடக்கிறதா புலனாய்வுத் துறை தகவல் அனுப்பியிருக்கு. எங்காளுங்க விழிப்போட செயல்படறாங்கன்னு நான் நம்பறேன். அத நிரூபிக்கத்தான் இன்னைக்கி ஒரு டெஸ்ட். நம்ம சிட்டி கோஸ்ட்டோட நாலு ஸ்ப்பாட்லேர்ந்து நானே நாலு ஆளுங்கள செட்பண்ணி கடத்தல்ல ஈடுபடுத்தியிருந்தேன். அவுங்க, கடலோரத்துல இருந்து டைமண்ஸ்ச எங்கிட்ட கொண்டுவந்து சேர்க்கறதுதான் டாஸ்க். ஆனா பாரு. இதுவரைக்கும் மூணுபேர வழியிலேயே எங்காளுங்க பிடிச்சுட்டாங்க. இன்னும். . . "பரந்தாமன் முடிப்பதற்குள்,
" இன்னும் ஒரு ஆளுதான. . .நிச்சயம் உங்காளுங்க பிடிச்சுடுவாங்க." மரகதம் அழுத்தமாக சொல்லவும், "முடியாது" என்று சொல்லிக்கொண்டே, வழியில் நின்றுக்கொண்டிருந்த சிவாவை தள்ளிக்கொண்டு காமினி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
"டி.எஸ்.பி சார். .. இந்தாங்க, நீங்க 'முடிஞ்சா' கொண்டுவந்து சேர்க்கச்சொன்னது"
"வாவ்! காமினி…வெல்டன். எப்படியோ போலீஸ் கண்ணுல மண்ண தூவிட்டு இந்த டைமண்ட கொண்டுவந்துட்டியே! என்று பாராட்டினார், பரந்தாமன்.
"அப்பா என்னப்பா இதெல்லாம்..? "சிவா முகத்தை சுளிக்க,
"மை டியர் சன்…கோஸ்ட்ல எங்காளுங்க எவ்வளவு விழிப்போட இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனும். . .அதே சமயத்துல எனக்கு மருமகளா வரப்போறவ சாமார்த்தியசாலியான்னும் தெரிஞ்சிக்கனும். ஸோ… .டூ இன் ஒன் டெஸ்ட். எப்படி என் ஐடியா? "
மரகதம் அவரை ஒரு பார்வை பார்க்க, அதன் அர்த்தம் விளங்காதவராய்,"என்ன மரகதம் பார்க்குற? அடுத்தது என்ன பண்ணப்போறேன்னுதானே. . பர்ஸ்ட். .. எங்காளுங்கள இன்னும் டைட்டா முடுக்கனும். நெக்ஸ்ட.. .நம்ம சிவா-காமினி கல்யாணத்த முடிக்கனும். " என்றார்.
சிவாவும் காமினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள,"ஆனா மரகதம். . .காமினிகிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கனும். நம்மகிட்டயிருந்து பையன கடத்திட்டு போனாலும் போயிடுவா" பரந்தாமன் சொல்ல, "அங்க்கிள். . . "என்று சிணுங்கினாள், காமினி.

4 comments:

  1. கதை அற்புதம் நண்பா.. உன் கற்பனையின் ஆழம் மெய்சிலிர்க்கவைக்கிறது. வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. கதை நல்லா இருக்குங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எனது முயற்சியை பாராட்டியிருக்கிற நண்பர்கள் கோபி, செந்தில், கலாநேசன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete