Tuesday, November 1, 2011

பள்ளிக்கூடம் - சிறுகதை

வாகனங்களும் தொழிற்சாலைகளும் நச்சுப்புகையை நாலா புறத்திலும் உமிழ்ந்துகொண்டிருக்கும் நகரத்திலிருந்து தள்ளியே இருந்தது அந்த கிராமம். வெகுகாலமாக படிப்பு வாசனையே அறிந்திராத அந்த கிராமத்தில்; நிகழ்காலத் தலைமுறைக்கு வரமாய் வந்தமைந்தது அந்தப் பள்ளி.

அதில் ஒரு வகுப்பறை தற்போது நிசப்தத்தால் நிரப்பப்பட்டிருந்தது. மாணவ மாணவியர் தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தபோதிலும் அவ்வப்போது தலையை நிமிர்த்தியும் சாய்த்தும் மணிமாறனை பார்த்தபடி இருந்தனர். ஒரு சிலர் கமலா டீச்சரையும் இடையிடையே பார்த்துவிட்டு குனிந்து கொண்டனர். கோவம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்த கமலா டீச்சரின் கடந்த கால்மணிநேர பேச்சின் பாதிப்பில்தான் வகுப்பறை அவ்வாறு கிடந்தது. டீச்சர் மீண்டும் பேச்சைத்தொடங்கினார்.

“கழுத. . . . . . . என்னடா வயசு உனக்கு? இதுல காட்டுற ஆர்வத்த படிப்பில காட்னா எதிர்காலத்துல நல்லாயிருப்ப. இல்ல. . . இப்படியே தான் இருப்பேன்னா. . . அப்புறம் என் வாயால சொல்லகூடாது”.

மணிமாறன் மெல்ல எழுந்து நிற்க முற்பட்டான். “ஆமாம்! இந்த மரியாதைக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல்இல்ல. உட்கார்ந்து தொல!”

அவன் உட்காரவில்லை.

“இது ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு. மனசு ஒரு எடத்துல நிக்காம அலைபாயும். கண்டகண்டதையும் மேயும். நாம தான் அத நம்ம கட்டுப்பாட்டுல வச்சிக்கணும். படிக்கிறது பத்தாவது. இப்போதைக்கு படிப்பு. . . . . படிப்பு. . . . . படிப்பு. . . . .. . இதுதான் நம்ம முழு நேர சிந்தனையா இருக்கணுமுன்னு எத்தன தடவ உங்ககிட்ட சொல்லியிருக்கேன்? ஏன்டா நான் சொல்றத புரிஞ்சிக்கவே மாட்றீங்க”

இதே போன்ற தொரு போதனை போன வாரமும் இதே வகுப்பறையில் நடந்தது. அப்போது நடந்தது வேறு ஒரு பிரச்சனை. அன்று குற்றவாளியாய் நின்றது நிர்மல் . அவனை திட்டி தீர்த்துவிட்டு அதன்பின் அந்த பாடவகுப்பு முழுவதும் அறிவுரையிலேயே முடிந்துபோனது.

உணவு இடைவேளையின் போது நிர்மலை சுற்றி மாணவர்கள் கூடி நின்றுகொண்டு ரகசியமாக ஏதோ பார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள் என்று ஒரு மாணவி கமலா டீச்சரிடம் சொல்ல, அவள், அது, என்ன ஏதென்று விசாரிக்கத் தொடங்கிய நொடியில் அதிர்ந்துபோனாள். நிர்மல் ஒரு கேமரா செல்போன் வைத்திருந்தான். அதில் நடிகைகளின் கவர்ச்சிப்படம் ஏகப்பட்டது இருந்தது. அதுமட்டுமல்ல, அதில் அவள் படம் ஒன்றும் இருந்ததைக்கண்டு இடிதாக்கி அதிர்ந்தாள். பாடம் நடத்துகையில் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான்.

செய்வதொன்றும் அரியாது, கமலா கத்தினாள், திட்டினாள், அழுதாள், . . . . பின் அறிவுரைகள் சொல்லத் தொடங்கினாள். அந்தக் கோவமே இன்னும் அவளுக்குள் ஆராத நிலையில், இப்போது மணிமாறன் மாட்டியிருக்கிறான்.

இது வேறு ஒரு பிரச்சனை. மணிமாறன் கட்டுரை நோட்டில் இருந்து விழுந்த அந்த ஒற்றைத்தாளில், “ அன்புள்ள காதலிக்கு. . . “ என்று தொடங்கப்பட்டிருந்தது. பக்கத்து வகுப்பு மாணவி ஒருத்திக்கான கடிதம் அது.

கமலா மனம் உச்சவலியோடு உழன்றுக்கொண்டிருந்தது. நிர்மல் பிரச்சனையிலிருந்தே, பள்ளியைவிட்டு போய்விடலாமா வேண்டாமா என்று குழம்பிகொண்டிருந்த அவளுக்கு இந்த பிரச்சனை ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது.

“தோ பாருங்கடா. . . உங்களுக்கு எவ்வளவோ நல்ல விதமா எடுத்துச்சொல்லிட்டேன். காசு பணமெல்லாம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். சாதி, இனம், மதம், மொழி. . . இதெல்லாம் ஒருத்ததனோட வாழ்க்கைய பெருசா மாத்திடாது. ஆனா படிப்பு. . பலம் வாய்ந்தது. அது நாம வாழ்கிற வாழ்க்கை முறைய அப்படீயே புரட்டி போடுகிற வல்லமை வாய்ந்தது. இல்லேன்னா. . . ரிக்ஷா ஓட்டுற ஒரு குடிகார அப்பனுக்கு பொறந்து, பிளாட்பாரத்தில வளர்ந்த நான் இன்னிக்கு உங்க முன்னாடி கௌரவமா இப்படி நிக்க முடியாது. ஒங்க வயசுல எனக்கு ஏற்பட்ட எத்தனையோ பிரச்சனைகள உடைச்சு எறிஞ்சிட்டு, வெறும் படிப்புல மட்டுமே கவனம் செலுத்தனுதால என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கு தெரியுமா? இன்னிக்கு எனக்கு டவுன்ல சொந்த வீடு, கார்ன்னு சகலவசதிகள் இருந்தும் அங்க இருக்கிற பள்ளிகள்லாம் விட்டுட்டு, இந்த கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு நானே விருப்பப்பட்டு ஏன் வந்தேன் தெரியுமா? இந்த பகுதியில் தான் வறுமையில் சிக்கித்தவிக்கிற குடும்பங்கள் ஏராளமா இருக்கு .இங்க இருக்கிற எத்தனையோபேர், நான் படிக்கும்போது இருந்த அதே அவல நிலையில் இருக்கீங்க. உங்கள படிக்கவச்சு, உங்களையும் மாத்த முடியம்ன்னு தான் நம்பிக்கையோடு வந்தேன். ஆனா . . . . எம்பேச்ச யாரும் கேட்கறதா இல்லை. இனியும் நான் இங்கே இருந்தேன்னா நான் பைத்தியக்காரி. நான் முடிவு பண்ணிட்டேன். நான் இந்தப் பள்ளிக்கூடத்தவிட்டு போறேன்.” வகுப்பறையை விட்டு வெளியேறிய கமலா டீச்சர் அடுத்த அரைமணி நேரத்தில் பள்ளி முதல்வர் முன், மாற்றல் விருப்ப கடிதத்தோடு நின்றாள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலிருந்த பள்ளிக்கல்வி வெகுவாக மாறியிருக்கிறது. அப்போது ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த மதிப்பு, மரியாதை, குருபக்தி, பயம் எல்லாம் தற்போது அற்றுப்போய்விட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் எதற்காகவும் தண்டிக்கக்கூடாது என்ற கல்வித்துறையின் சமீபத்திய சுற்றறிக்கைக்குப் பின், போக்கிரித்தனமான மாணவர்களின் கை ஓங்கியது. ஆனால் அதில் பெரும்பாலானோரின் வாழ்க்கை இருளில் மூழ்கத் தொங்கியது.

கமலா வீட்டிற்கு சென்ற பின்னும் நிம்மதி இழந்து இருந்தாள். இதுபோன்ற மனநிலையில் அவள் கண்முன் தோன்றுவதும் காதில் வந்து விழுவதும், அவளுடைய பள்ளி ஆசிரியர் பிரபுவின் பிம்பமும் குரலும் தான். அவரது அறிவுரைகளும் ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாதிருந்தால், இன்று கமலாவும் ஏதோ ஒரு பிளாட்பாரத்தில் , யாரோ ஒரு குடிகாரனோடு குடித்தனம் நடத்திக்கொண்டிருந்திருப்பாள். ‘சமூகத்துல பிறப்பால இருக்கிற ஏற்ற தாழ்வுகள, ஏழை பணக்கார வரப்புகள, உடைததெறியக்கூடிய ஒரே வலிமைவாய்ந்த ஆயுதம் படிப்புத்தான். அது மந்திரசக்தி வாய்ந்தது. காலவெள்ளத்துல உங்க வாழ்க்கைப்படக, கறையேத்த உதவும் துடுப்பு படிப்புதான். சில பெற்றோர்கள் அப்போ ஒழுங்கா படிக்காததால இப்போ கஷ்டப்படுறாங்க. ஆனா இப்போ நீங்க ஒழுங்கா கஷ்டப்பட்டு படிச்சீங்கன்னா உங்க எதிர்காலத்துல ‘கஷ்டம் ‘ என்கிற வார்த்தையே உங்க வாழ்க்கை அகராதியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும்’ பிரபுவின் இத்தகைய வரிகளே அவளுக்குள் தன்னம்பிக்கையை உரத்தையும் ஊட்டச்சத்தையும் இட்டு வளர்த்தது.

அழைப்பு மணி ஒலித்து, கமலாவின் எண்ண ஓட்டத்தை இடைமறித்தது. கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது தன் கணவன் கார்த்திக் வழக்கமாக வரும் நேரத்தை காட்டியது.

“என்ன கமலா? ஏன்ன டல்லா இருக்க. ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனையா?”

“ம்ம்”

“என்னாச்சு. . . . ? அந்த பையன் மறுபடியும் உன்ன செல்லுல போட்டா எடுத்துட்டானா?” புன்முறுவலோடு கேட்டான் கார்த்திக்.

“ அந்தப் பள்ளிகூடம் வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

“ அது இருக்கட்டும். பிரச்சன என்னது ?”

“ மணிமாறன்னு ஒரு பையன். . .ஒரு பொண்ணுக்கு. . .” கமலா இழுத்தாள்.

“லவ் லெட்டர். . . அவ்வளவுதானே!” கார்த்திக் இயல்பாய் கேட்டான்.

“என்ன நீங்க. . . எல்லாத்தையுமே சாதாரணமா எடுத்துக்கறீங்க? எனக்கு எவ்வளவு கோவம் வருது தெரியுமா? எம்மேல யாராவது ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லைன்னு சாத்து சாத்து சாத்திடலாம்ன்னு பார்த்தேன்.”

“அடி பைத்தியக்காரி. . . அந்த பையன் லெட்டர் எழுதுனதுக்கு நீ ஏண்டி மாறணும்? இதோ பாரு உன் லட்சியம்- கொள்கை- கோட்பாடு- கடமை உணர்வோட வீரியம் இவ்வளவுதானா? சர்வீஸ் முழுசையும் ஏழை மாணவர்களோட நலனுக்கு செலவழிக்கப்போறேன்னு நீ சொன்னதெல்லாம் வெறும் வாய் ஜாலம் தானா?

“ என்னங்க பசங்தான் என்ன புரிஞ்சுக்க மாட்றாங்கன்னா.. .. . நீங்களுமா? அவங்களுக்காக நான் உழைக்கத் தயார். ஆனா. . . எம்பேச்ச கேட்க அவங்க தயாரா இல்ல. நான் எவ்வளவு சொல்லியும் திரும்பத்திரும்ப தப்பு பண்றாங்க. அவங்க மத்தியில என் உழைப்பும் பேச்சும் விழலுக்கு இறைக்கிற நீருங்க. புண்ணியப்படாது.” கமலா கவலை கலந்த குரலுடன் சொன்னாள்.

“மொத்தம் எத்தன பேரு உங்கிளாஸ்ல?

“நாற்பத்தஞ்சு”

“ம்ம். இந்த நாற்பத்தஞ்சு பேருல, ரெண்டு பேரு உம்பேச்ச கேட்கல, மதிக்கலேன்னா. . . நீ ஸ்கூல் மாறிடுவியா? நீ புதுசா போற ஸ்கூல்ல ஒரு நிர்மலும் ஒரு மணிமாறனும் இருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? நீ அடிக்கடி சொல்லுவியே உன்னுடைய கெய்ட் ஆன்ட் காட் ‘பிரபுசார்’ அவரும் உன்ன மாதிரியே யாரோ ரெண்டு பேருக்காக உங்க ஸ்கூல விட்டு அப்போ போயிருந்தார்னா.. . . உன் நிலம என்னவாகியிருக்கும்?”

கார்த்திக்கின் அந்த கடைசி வாக்கியம், அவள் சடாரென வழுக்கி, சாளகத்தில் விழுந்துவிட்டது போன்ற உணர்வை உள்ளத்துள் உண்டாக்கியது.

“பிரபுசார் இல்லாமல். . . . ஐய்யோ!” முன் மண்டையை வலது உள்ளங்கையால் தேய்துக் கொண்டாள்.

“கமலா முதல்ல உம் பேச்ச எல்லோரும் கேட்டு நடக்கணும்னு நெனைக்கறது மகாதப்பு. கேட்காத ரெண்டுபேருக்காக ஸ்கூல் மாறதவிட உம் பேச்ச கேட்டு நடக்கிற ரெண்டுபேருக்கா அங்கேயே இரு. அவங்கள படிக்கவை, முன்னேத்து, உனக்கு ஒரு பிரபு சார் மாதிரி அவங்களக்கு ஒரு ‘கமலா டீச்சர்’ கிடைக்கட்டும். எனக்கு மனசுல தோன்றதை நான் சொன்னேன், அப்புறம் உன் இஷ்டம்” முற்றுபுள்ளி வைத்தான் கார்த்திக்.

மறுநாள் காலை. பள்ளி வளாகத்தில் கமலா நுழைந்ததும் நுழையாததுமாய் நான்கைந்து மாணவர்களும் ஆறேழு மாணவிகளும் அவளை சூழ்ந்து கொண்டு, ‘டீச்சர். . . எங்கள விட்டு போகாதீங்க டீச்சர்’, ‘நீங்க எங்களுக்கு தெய்வம் மாதிரி டீச்சர்’ ‘ பல பிரச்சனைகளுக்கு நடுவுல நான் படிக்கிறேன்னா அதுக்கு காரணம் நீங்க தான் டீச்சர்’ ஒவ்வோரு குரலில் ஒவ்வொரு வாக்கியம் வந்து விழுந்தது. கமலாவிற்கு கண்களின் ஓரத்தில் கசிந்துகொண்டிருக்க , “நான் போவலடா செல்லங்களா” என்று அழுத்தமாக சொன்னாள்.

மாணவ மாணவியர்கள் ஒரு சேர ‘ஓ…’வென கோஷமிட்டு ஆர்ப்பரித்தார்கள்.

புதுவைப் பிரபா

No comments:

Post a Comment