Monday, October 31, 2011

பொய் சொல்லக்கூடாது அப்பா - சிறுகதை




"வளர்ந்துட்டேயில்ல . .தர்ட் ஸ்டாண்டர்ட் வேற போயிட்ட. . .இனிமே, நீயே, தானா குளிக்க கத்துக்கணும்॥ . சரியா. . ." அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு முதன்முறையாக உயிர் கொடுக்க, குளியலறைக்குள் நுழைந்தான், ராகுல்.

முதலில் அவன் கண்ணில் பட்ட சோப்பு டப்பாவை எடுத்து, சோப்பை இரண்டு மூன்று முறை திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவன் மனது ,அதிகாலையில், அப்பாவும் எதிர்வீட்டு டேனியல் மாமாவும் பேசிக்கொண்டிருந்த நொடிகளுக்கு பின்நோக்கிச் சென்றது।

" ஏன் சார். . .நீங்க எப்பத்தான் உங்க கம்பனியில சீனியர் மேனேஜரா ஆவறது?"
"டேனியல் சார்। . . நான் நெனச்சிருந்தா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கலாம். என்ன. . .சோப்பு போட்டிருக்கணும்.மத்தவங்க மாதிரி நானும் சோப்பு போட்டிருந்தேன்னா. . . இந்நேரம் சீனியர் மேனேஜரா என்ன , ரீஜனல்; மேனேஜராகவே ஆகியிருப்பேன். ஏன்ன பண்ணறது? எனக்குன்னு இல்லீங்க. . .எங்க பரம்பரைக்கே சோப்பு போடற பழக்கமே கிடையாது."

மீண்டும் சோப்பை இரண்டுடொருமுறை திருப்பித்திருப்பி பார்த்துவிட்டு, " ச்சே! நம்மல பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ அப்பாவே இப்படி அப்பட்டமா பொய் சொல்றாரே!" ராகுல் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
விஷயம் விளங்கும்வரையோ,அல்லது யாராவது விளக்கும்வரையோ, அப்பாவை பற்றிய நினைப்பு அவனுக்குள் மாறப்போதவதேயில்லை।

-புதுவைப் பிரபா-

மாற்ற முடியும்




சமைக்கவும் கழுவவும்
பெருக்கவுமே பெண்கள் எனும்
நிலை களைய ஒன்றாய் கூடி

ஊருக்கும் சேரிக்கும் இடையே ஓடும்
சாதி சாளகத்தை
சமத்துவ மண்கொட்டி மூடி

துப்பாக்கித் தோட்டாவும்
வெட்டறுவா வெடிகுண்டும்
நிரந்திரமாய் செயலிழக்கச் செய்து

பொய்- பகட்டு- சூது
வன்கொடுமை இல்லாத
நன்சமூகம் ஒன்று நாம் நெய்து

மாற்றிக்காட்டுவோம்
புவியை மாற்றிக்காட்டுவோம்

மனிதர்களே!
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
இந்த நொடிவரை
மண்ணில்

மாறாமலே இருப்பது
மாற்றம் மட்டும்தான்

நம்புங்கள். . .
நம்மால் நல்லதாய் உலகை
மாற்றிக்காட்டமுடியும்
இது சத்தியம்
நாம் ஒன்றுகூடி
ஒரே அணியில் நின்றால்
நாளைக்கேகூட இது சாத்தியம்.

-புதுவைப்பிரபா-
(அக்டோபர் மாத இலக்கியபீடம் இதழில் வெளிவந்த கவிதை)