Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, September 15, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான கவிதை




அழுகுரல் ஓய்ந்தபாடில்லை

அழுகையின்
அதிர்வெண்ணும் அடர்த்தியும்
அவ்வப்போது மாறுபடுகிறதே தவிர
அறவே அற்றுப்போகவில்லை

வடகிழக்கிலிருந்து
ரசிக்கமுடியும்படியான
பச்சிளங்குழந்தைகளின் அழுகுரலும்
தென்மேற்கிலிருந்து
பயங்கொள்ள வைக்கும்
பெரியவர்களின் அகோர அழுகுரலும்
கேட்டபடியே இருக்கிறது.

வருகையை பதிவுசெய்ய
ஒருவித அழுகையும்
வெளியேற்றத்தை உறுதி செய்ய
ஒருவித அழுகையுமாய்
அந்த வளாகத்திலிருந்து
அழுகைகள் அணிவகுக்கின்றன

அந்த மருத்துவமனையின்
பிரசவ அறைக்குள்ளிருந்து வருகிற
மெல்லிய சங்கீத அழுகைக்கும்
பிணவறைக்கு வெளியிருந்து பரவுகிற
கனத்த ஓல அழுகைக்கும்
இடைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது
நமக்கான வாழ்க்கை.


புதுவைப்பிரபா

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான படக்கவிதை













அழகென்ற சொல்லுக்கு
அர்த்தம் தருபவளே !
மூடிய விழிக்குள்ளும்
முழுவதுமாய் வருபவளே !

உன் காந்த விழிப்பார்வை – என்
எண்ணத்தை ஈர்க்குதடி
உனை பார்க்கும் நொடிப்பொழுதில்
நுரையீரல் வேர்க்குதடி 

உன் உதட்டில் பூத்திருக்கும்
மெல்லிய புன்னகைப்பூ
அதை பார்க்கின்ற உன் கூடை
பூவிற்கும் பொச்சரிப்பு

பெண்ணே....!

நீ சாய்ந்திருக்கும் கதவாக
நான் ஆகக்கூடாதா ?
உன் விரல் பட்ட வரத்தாலே
என் ஆயுள் கூடாதா ?

புடவை கட்டி நிற்கும் பொன் நகையே!
பூகம்பம் நிகழ்த்தும் புன்னகையே !
உன்னால் ...
ஹார்மோன்கள் சுரக்கிறது
சுயம் எனக்கு மறக்கிறது
ஒவ்வொரு ‘ செல்’ லும் என்னுள்
ரெக்கைகட்டி பறக்கிறது  


உன் அழகுநீர் பாய்ந்து பாய்ந்து
என் கற்பனை செழிக்கிறது
உனை வர்ணிக்க வார்த்தை இன்றி
என் தாய்மொழி  விழிக்கிறது


பாரடி..

இந்த  கவிதைகூட அழகாச்சு
உன்னோடு பழகி
ஐயம் ஏதுமில்லையடி -நீ
பிரபஞ்ச பேரழகி

---------------------------------------------- 

புதுவைப்பிரபா

Saturday, September 13, 2014

இளைய தலைமுறை



பேருந்து நிறுத்ததில்
நின்றுருந்த போது
அறுவது வயதை தாண்டியவர்
அருகில் வந்து நின்றார்
புகையிலை நெடி
குமட்டிகொண்டு வந்தது

ஐம்பது வயது ஆசாமி
பின் பக்கம் வந்து நிற்க
பிராந்தி நாற்றம்
குடலை பிரட்டியது

நாற்பது வயது கொண்டவர் வந்து
நான்கு அடி தள்ளி நிற்க
நிக்கோட்டின் வாடை
நெஞ்சை அடைத்தது

அப்போது அங்கு வந்த பேருந்தில்
மூவரும் ஏறிக்கொள்ள
"அப்பாடா" என்று
ஆசுவாசப்பட்ட நொடி

இருபதுவயது இளைஞன்
அருகில் வந்து நின்றான்

இப்போது
ஒருசேர
அந்த மூன்று நாற்றமும் அடித்தது.

----------------------------------------------------------------------------
 புதுவைப்பிரபா

பிரியும் வரம் வேண்டும்



என் இருத்தலை
இல்லாமலாக்கும் மரணம்
எப்படியும் வரலாம்

பயண விபத்தில்
மண்டை நசுங்கி
குருதியோடு மூளையும்
வெளி வழிந்தோ...
அல்லது
வெடிகுண்டில் சிக்கி
உடல் பிய்ந்து
குடல் சிதறியோ...

அறிந்தவர்களின் ஆத்திரத்தால்
அல்லது
அறிந்திராதவர்களின் அவசரத்தால்
கழுத்தறுபட்டோ
அல்லது
துப்பாக்கியால் சுட்டோ...

மருத்துவத்திற்கு கட்டுப்படாத
புற்றுநோயாலோ
அல்லது
தொற்றுநோயாலோ...

கவனக்குறைவால்
மலையிலிருந்து கால் இடறியோ
அல்லது
நீர்நிலைக்குள் மூச்சுத்திணறியோ...

அவமானத்தின் ஆணைக்கு
அடிபணிந்து
அல்லது
வெறுப்பின் உச்சத்தில்
மதி இழந்து
கோழைத்தனமான
தற்கொலையினாலோ...

மரணம் எனக்குள்
ஒருநாள் தோன்றும்

ஆனால் என் ஆசையெல்லாம்-
இதுபோன்று ஒரு
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போதே
எந்தன் உயிர் பிரிந்துவிட வேண்டும்.

----------------------------------------------
புதுவைப் பிரபா

Thursday, August 8, 2013

உனக்காகத்தான் …

எனக்காக வேண்டாம்
உனக்காகத்தான் கேட்கிறேன்

உன்-
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கப்படும்

உனக்குள்;-
முப்பது தசைகள்
ஒருசேர இயங்கும்

உன்-
முகத்தில் விழுந்திடும்
சுருக்கம் தவிர்க்கும்
கூடவே-
மூன்று கலோரிகள்
நொடியில் எரிக்கும்

ஆம்..
ஆம்.
இத்தனையும் செய்வது
ஒரே ஒரு முத்தம்தான்

எனக்காக வேண்டாம்
உனக்காகத்தான் கேட்கிறேன்.

புதுவைப்பிரபா

Wednesday, August 7, 2013

உயிர்மூச்சு


உன் விழி தாளை
விரித்து வைத்து
என் விழிகளால்
கடிதம் தீட்டி
புன்னகையின் கைகளில்
கொடுத்தனுப்பிவைக்கிறேன்


நீயும் -
புன்னகை கைகளாலே
அதை வாங்கிக்கொள்கிறாய்

மறைவாய் கிடக்கும்
மனசு மேசைக்குச் சென்று
மௌன புத்தகத்துள்
மறைத்துவைத்து
படிக்கத்தொடங்குகிறாய்

சத்தமின்றி
உன் பின்னால் வந்து நின்று
தோளைத் தொட்டு –
"ஏய். . .திருடி" என்று
கண்சிமிட்டி சிரிக்கிறது
காதல்

புதுவைப்பிரபா

கண் தானம் - கவிதை

இமைகளுக்கடியில்
இருள்தனை சுமப்போர்
நிலைதனை  நினைத்துப் பார்த்திடுவோம்
விழிகள் தானம்
தருவதன் மூலம் - அவர்
பார்வையில் வண்ணம் சேர்த்திடுவோம்

மண்ணுக்கு கண் எதற்கு ?
கொடுத்திடுவோம் மனிதருக்கு

புதைத்து எரித்து
சிதைப்பதைத் தவிர்த்து
தானமாய் கொடுத்து
விழி விளக்கேற்றுவோம்!
பார்வையற்றோர்
யாருமில்லாத
உன்னத நிலைக்கு
உலகை மாற்றுவோம்!


புதுவைப்பிரபா

Thursday, July 11, 2013

பிரித்தல் என்னும் பெரும்பிழை





ஒருமுறை கூட
நமக்குள்
சண்டை வந்ததேயில்லை

ஒருவரையொருவர்
முந்திக்கொண்டு
விட்டுக்கொடுக்கப் பழகியதால்
விளையாட்டிற்குக்கூட
நாம்
திட்டிக்கொண்டதோ
அடித்துக்கொண்டதோ இல்லை

நம் வீட்டிற்கு வந்தவர்கள்
ஒருவர் தவறாமல்
“எப்படி இதுங்க ரெண்டும்
இவ்வளவு ஒத்துமையா இருக்கு?” என்று
ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறார்கள்...
கேட்டிருக்கிறார்கள்.

அன்பும் பாசமும்
புரிந்துணர்வும்
நமக்கிடையில்
அபரிமிதமான அளவு
இருந்துகொண்டிருக்கும்போது-
நம்மை பிரித்துவைத்து
நீதிமன்றம்
ஒரு பெரும் பிழை செய்துவிட்டது.
இனி...
நீ...அம்மாவுடனாம்
நான் அப்பாவுடனாம்.

----------------------------------------------------------
புதுவைப்பிரபா

இப்படியும் இருக்கலாம். . . .



அவள் பார்க்கும்போதெல்லாம்
நான் பார்க்காமல் இருக்கிறேன் என்று
கவலைப்படுகிறாள் அவள்

அவள் பார்க்கும்போது மட்டும்
பார்க்காததுபோல் இருக்க வேண்டும் என்று
கவனமாய் இருக்கிறேன் நான்.

அவளது கவலைக்கும்
எனது கவனத்திற்கும்
காரணமாய் இருப்பது
காதலாகக்கூட இருக்கலாம்.

புதுவைப்பிரபா

Tuesday, March 26, 2013

அழகு என்பாள் கவிதை தந்தாள்



அகராதியில்
அழகு எனும் சொல்
அவள் பெயரைத்தான்
பொருள் குறிக்கிறது

அவளால்
அழகுபெயர்ச்சொல் ஆனது
தமிழ் இலக்கணம் மாறிப்போனது

அவளது அழகிய விழிகளின்
பார்வை பருக்கைகளை
கருப்பொருளாய் கொண்டு

மயக்கும் புன்னகையை
என் எண்ண எழுதுகோலில்
மையாய் நிரப்பிக்கொண்டு

அவள் 
அமர்ந்தால் - எழுந்தால்
குனிந்தால் - நிமிர்ந்தால்
நின்றால் - நடந்தால்
வளைந்தால் - நெளிந்தால்
உதிர்ந்துவிழும் அழகினிலிருந்து
சொற்களைப் பொறுக்கிக்கொண்டு

கவிதைகள் எழுதுகிறேன்
அவை-
ஓவியமாக உருமாறிக்கொள்கின்றன

அவள் பெயரை எழுதி 
நகலெடுத்தாலும்
அவள் மௌனத்தை அப்படியே
மொழிபெயர்த்தாலும்
கவிதைகளாகவே
கண்சிமிட்டுகின்றன
இந்த கவிதையைப்போலவே.

Wednesday, October 31, 2012

நான்காம் கண்


எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்
என்னைச்சுற்றிவர-
தண்ணீர் பானையை
என் தோளில் சுமத்தி
கத்தியால் கொத்தி
முதல் கண்ணை திறந்து
சுற்றிவரச் சொல்கிறான்
ஈமச்சடங்கு செய்பவன்

என் பிடியிலிருக்கும்
வாழ்க்கைப் பானையிலிருந்து
பீச்சி அடிக்கிறது
மண்ணாசை.

இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
இன்னொரு கண்ணை திறக்கிறான்.
கொட்டி தீர்கிறது
பொன்னாசை

கடைசி சுற்றிலும்
ஒரு கண் திறந்துவிடுகிறான்
வடிந்து அடங்குகிறது
பெண்ணாசை

பின்-
பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
ஓங்கி தரையில் அடிக்கிறேன்
வெறும் காற்றடைத்திருந்த பானை
சிதறி தெறிக்கிறது

அதில் ஒரு சில்
என் மேல் பட்டதும்
கலைகிறது கனவு

மெல்ல திறக்கிறது
என் நான்காம் கண்

புதுவைப்பிரபா