Thursday, January 7, 2010

விடியுமா ?



நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்

பட்டணத்தில் பொறந்துபுட்டு கஷ்டம் நஷ்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூணுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்

கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்

கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்

ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்

ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?


- புதுவை பிரபா -

1 comment:

  1. நாட்டு நடப்பை பாட்டில் வடித்த பிரபா
    பாட்டு வாழ்வில் பாமரனின் பக்கம் நிற்போம் ஒன்றாய்.
    வாழ்த்துகள்

    ReplyDelete