Sunday, December 27, 2009

வேண்டுகோள்

மரணப்படுக்கையிலே மல்லாந்து படுத்துக்கொண்டு
மூச்சுவிட திணறுதிங்கே உலகம் - காரணம்
சாதிமத பேதமென்னும் கலகம்

கருவிழிகள் நீர்சொரிய காண்கின்றேன் சகமனிதன்
மனிதனையே வெடிவைத்து வெடிக்க - இதயம்
உடல்விட்டு வெளிவந்து துடிக்க

ஊர்போகும் பேருந்தின் உள்ளிருந்து திடுமென்று
தலை ஆறாய் உடல்நூறாய் சிதறும் - குழந்தை
கைபிய்ந்து கால்பிய்ந்து கதறும்

பழிவாங்கும் நோக்கோடு பைத்தியம்போல் அலைகின்றார்
அப்பாவிகளை வெறிகொண்டு தாக்க - இங்கு
யாருமில்லை மனிதநேயம் காக்க

ஒப்பாரிக்கு ஓய்வு தர உறுதிகொள் மனிதா
வெடிவைக்கும் மனப்போக்கை அழிக்க - இனி
அமைதிகொள் புவிப்பந்து செழிக்க

முயன்றால் முடியாதது ஏதுமில்லை தெரியாதா
மனது வை மனிதா அஃது முடியும் - நாளை
வன்முறையற்ற உலகம் விடியும்

மாந்த சமதளத்தில் வகுப்பின வரப்புகளை
அமைத்தபடி பிரிவினைகள் எதுக்கு - தகர்த்து
ஒற்றுமை சமபரப்பை செதுக்கு

பாபரோ ராமரோ பெயர் பிரித்து பார்க்காமல்
நட்பு கொண்டு நெஞ்சோடு இறுக்கு - உலகம்;
உய்த்தலில் உன் பங்கும் இருக்கு.

-புதுவைப் பிரபா -

நன்றி-புதுவை பாரதி இதழில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படைப்புகளில் சிறந்த படைப்பென பரிசுக்கும் பாராட்டிற்கும் தேர்வு பெற்ற கவிதை

Saturday, December 26, 2009

ஒற்றுமை



பகிர்ந்துண்ணும் பழக்கம்
காணாமல் போயிருந்ததால்
வைத்த ஒரு தட்டு சோற்றையும்
ஒண்டியாய் உண்ண நினைத்தது
ஒரு காகம்

உண்ண எத்தனித்தபோது
எதிர்பாராமல்;
இன்னும் சில காகங்கள்
வந்தமர்ந்தது

உண்ணுவதை விட்டுவிட்டு
வந்த காகங்களை
விரட்டுவதிலேயே
குறியாய் இருக்க. . .

இடைப்பட்ட நேரத்தில்
அங்கு வந்த பூனையொன்று
பசியாறிப்போயிற்று

எந்த காகத்திற்கும்
பருக்கைச் சோறுக்கூட
கிடைக்காமல்போனது

ஆனாலும்-
"அப்பாடா. . .யாருக்கும் கிடைக்கலை"
வருத்தமற்று, நிம்மதியாய்
பறந்துபோயின காகங்கள்
தமிழ் எழுத்தாளர்கள் குடியிருப்பு
மாடி ஒன்றிலிருந்து.


Monday, December 14, 2009

இப்படியுமிருக்கலாம். . .


தலைவரைப் போல
தானும் தோற்றமளிக்கவேண்டும்
என்ற எண்ணம் கொண்ட
தொண்டனாக இருக்கலாம்

சாத்திர சம்பிரதாய சிறையில்
சிக்குண்டுவிட்ட
சாமானியனாக இருக்கலாம்

காணிக்கையாக்கிவிட்டால்
கடவுள் கண்டிப்பாக கண் திறப்பார்
என்று கனவு காண்பவனாக இருக்கலாம்

அஞ்சுக்கும் பத்துக்கும்
சிங்கியடித்துக்கொண்டு
வாழ்க்கை வண்டி ஓட்டும்
வறுமையாளனாக இருக்கலாம்

தன் முகத்தில் இருக்கும்
சிற்சில குறைகளை
மூடிமறைக்கும்
முயற்சியாக கூட இருக்கலாம்

எது எப்படியிருந்தாலும்
தாடியோடு திரிபவர்களையெல்லாம்
தயவு செய்து
காதலில் தோல்வியடைந்தவர்களின்
கணக்கில் சேர்த்துவிடாதீர்கள்!