Tuesday, March 26, 2013

அழகு என்பாள் கவிதை தந்தாள்



அகராதியில்
அழகு எனும் சொல்
அவள் பெயரைத்தான்
பொருள் குறிக்கிறது

அவளால்
அழகுபெயர்ச்சொல் ஆனது
தமிழ் இலக்கணம் மாறிப்போனது

அவளது அழகிய விழிகளின்
பார்வை பருக்கைகளை
கருப்பொருளாய் கொண்டு

மயக்கும் புன்னகையை
என் எண்ண எழுதுகோலில்
மையாய் நிரப்பிக்கொண்டு

அவள் 
அமர்ந்தால் - எழுந்தால்
குனிந்தால் - நிமிர்ந்தால்
நின்றால் - நடந்தால்
வளைந்தால் - நெளிந்தால்
உதிர்ந்துவிழும் அழகினிலிருந்து
சொற்களைப் பொறுக்கிக்கொண்டு

கவிதைகள் எழுதுகிறேன்
அவை-
ஓவியமாக உருமாறிக்கொள்கின்றன

அவள் பெயரை எழுதி 
நகலெடுத்தாலும்
அவள் மௌனத்தை அப்படியே
மொழிபெயர்த்தாலும்
கவிதைகளாகவே
கண்சிமிட்டுகின்றன
இந்த கவிதையைப்போலவே.