Wednesday, October 31, 2012

திருமணம்-- ஹக்கூ

ஆகாதவர்கள் ஆகவில்லையே என்றும்
ஆகிவிட்டவர்கள் ஆகிவிட்டதே என்றும்
வருதப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

புதுவைப்பிரபா

விவாகரத்து செய்யுங்கள்



அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்

குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்

இன்னும்..இன்னும்…

இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.

அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!

திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்

சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்

நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம் 
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம் 
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்

விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்

புதுவைப்பிரபா

நான்காம் கண்


எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்
என்னைச்சுற்றிவர-
தண்ணீர் பானையை
என் தோளில் சுமத்தி
கத்தியால் கொத்தி
முதல் கண்ணை திறந்து
சுற்றிவரச் சொல்கிறான்
ஈமச்சடங்கு செய்பவன்

என் பிடியிலிருக்கும்
வாழ்க்கைப் பானையிலிருந்து
பீச்சி அடிக்கிறது
மண்ணாசை.

இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
இன்னொரு கண்ணை திறக்கிறான்.
கொட்டி தீர்கிறது
பொன்னாசை

கடைசி சுற்றிலும்
ஒரு கண் திறந்துவிடுகிறான்
வடிந்து அடங்குகிறது
பெண்ணாசை

பின்-
பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
ஓங்கி தரையில் அடிக்கிறேன்
வெறும் காற்றடைத்திருந்த பானை
சிதறி தெறிக்கிறது

அதில் ஒரு சில்
என் மேல் பட்டதும்
கலைகிறது கனவு

மெல்ல திறக்கிறது
என் நான்காம் கண்

புதுவைப்பிரபா

Monday, September 24, 2012

தமிழர்தோட்டம்  வலை தளம் நடத்தும் மாதாந்திர கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை. . . கீழ்காணும் சுட்டியில்

http://www.tamilthottam.in/t32768p20-topic#205637

பாடிப் பறந்த புதுவைக்கு​யில் - தமிழ்ஒளி

புதுவை பெற்றெடுத்த கவிஞர் "தமிழ்ஒளி"யை நாம் நினைவில் கொள்ளாவிட்டால் புதுமை, புரட்சி, இலட்சியம் என்ற சொற்கள் பொருளற்றதாகிவிடும்.
ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு (1951) "தமிழ்ஒளி" அவ்வப்போது "அமுதசுரபி" அலுவலகம் வருவார்.
சந்தித்திருக்கிறேன்.
டென்சிங் என்ற இந்திய இளைஞர், இமயமலையின் உச்சியில் தேசியக் கொடியை நாட்டிய செய்தியை 1953களில் உலகம் பரபரப்பாகப் பேசியது.
அதிசயத்துடன் பேசப்பட்ட "எவரெஸ்ட் பிடிபட்டது" நிகழ்ச்சியை - அந்தச் சாதனையை "தமிழ்ஒளி" கவிதையாகப் படம்பிடித்திருந்தார்.
அந்தக் கவிதை:-
விண்மீது மோதுகின்ற
வெற்புமுடி "எவரெஸ்ட்"
பெண்ணரசி தேவமகள்
பேருலகில் மானிடரை
கண்காட்டி ஏமாற்றிக்கை
பிடியிற் சிக்காமல்
மண்காட்டிக் கைலாய
வான்காட்டிக் கொக்கரித்தார்".
எவரெஸ்ட் பிடிபட்ட நிகழ்ச்சியை நாம் மறந்துவிடலாம்.
ஆனால், "தமிழ்ஒளி"யின் "எவரெஸ்ட் பிடிபட்டது" கவிதை வரிகள் சாகாவரம் பெற்று இன்றைக்கும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
1960ஆம் ஆண்டு நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்பட்டுச் சாதனை படைத்த நாளில், "நெய்வேலி நாம் பெற்ற பேறு" எனக் கவிபாடிப் பெருமிதம் கொண்டவர் "தமிழ்ஒளி".
இந்திய அரசின் "நேஷனல் புக் டிரஸ்ட்" நிறுவனம், சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த கவிதைகளின் தொகுப்பாக உருதுமொழியில் வெளிவந்த நூலில் "தமிழ்ஒளி"யின் "நெய்வேலி" கவிதை இடம்பெற்றுள்ளது.
தென் ஆர்க்காடு மாவட்டம் - குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்ற சிற்றூரில் பொ. சின்னையா -  செங்கேணி அம்மாள் இணையருக்கு 1924ஆம் ஆண்டு செப்டம்டர் 21ஆம் தேதி தலைமகனாய் பிறந்தார்.
அவரை வளர்த்தது புதுவை.
அவர் பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் விஜயரங்கம்.
பாரதியின் கவிதைகளைப் படித்தார்.
பாரதியின் கவிதை ஊக்கத்தால் வீறு கொண்டெழுந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தாமே விரும்பி முயன்று தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
அந்தத் தொடர்பு ஆசிரியர் - மாணவர் உறவாக வளர்ந்தது.
"பாண்டியன் பரிசு" காவியத்தின் கையெழுத்துப்படியை நகல் எடுக்கும் பொறுப்பு "தமிழ்ஒளி"யிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவிதை ஊற்றை அந்த வாய்ப்பு பெருகச் செய்தது. ஒப்பற்ற காவியத்தைப் படியெடுக்கும்போதே "தமிழ்ஒளி"யின் உள்ளக் கனல் கொழுந்துவிடத் தொடங்கியது.
"நீயும் எழுது, எழுது" என்று அவர் உள்ளத்தில் கவிப்புனல் பாயத் தொடங்கியது.
"தமிழ்ஒளி"யின் கவிதை உள்ளத்தை நன்கு பண்படுத்தினார் பாவேந்தர் பாரதிதாசன்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்றாண்டு காலம் முறையாகப் பயின்றார்.
"சக்தியின் கனவு" என்றொரு நாடகத்தை இயற்றினார்.
இது பிற்காலத்தில் "வணங்காமுடி" என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
இவர் எழுதியதாகக் குறிப்பிடப்படாதது கொடுமை மட்டுமல்ல, வருந்தத்தக்கதும்கூட.
1945ஆம் ஆண்டு விடுமுறையின்போது சென்னை வந்த விஜயரங்கத்துக்கு, சென்னை பல கவிஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.
கவிஞர் குயிலன் அவருக்கு நண்பரானார்.
"ஜனயுகம்" என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார். இரண்டு இதழ்களை வெளியிட்டார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.
பெற்றோரிடம் பணம் கேட்டார்.  அவர்கள் தர மறுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்ப்பே வேறு.
தங்கள் புதல்வர் வகுத்துக்கொண்ட வாழ்க்கைமுறை குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை.
வருவாய்க்கு ஒரு தொழில்; வாழ்க்கைக்கு ஒரு துணை என்ற அடிப்படையில் அவருடைய வாழ்க்கையும் அமைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
தம்மைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பெண்தான் தனக்குத் துணைவியாக அமைய வேண்டும் என்று "தமிழ்ஒளி" உறுதியாகக் கருதியதால், திருமணச் சிந்தனையை விடுத்து, பெற்றோரை விட்டு புதுவையினின்று சென்னைக்குத் திரும்பினார்.
மகனைப் பற்றிய பெற்றோரின் கனவு சிதைந்தது.
1949லிருந்து ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் சென்னையிலிருந்து கவிதை வேள்வி நடத்தினார் விஜயரங்கம்.
அப்போதுதான் அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.
"தமிழ்ஒளி"யின் திறமையை உணர்ந்த மக்கள் எழுத்தாளர் "விந்தன்", "தமிழ்ஒளி"யின் கவிதை மலரப் பல விதங்களில் உதவியிருக்கிறார்.
பூவை எஸ்.ஆறுமுகம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுத்துலகில் ஒளி வீசப் பல விதங்களில் "தமிழ்ஒளி"க்கு ஆதரவு தந்தனர்.
திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த "தமிழ்ஒளி"யின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டியவை.
துணிவுடன் தன் கருத்தைக் கூறும் "கவிஞருக்கே உரிய துணிவு" அவரிடம் இருந்தது.
புதுமைப்பித்தன் கவிதைகளைப் பற்றிய மறைந்த இரகுநாதனின் கருத்தை "தமிழ்ஒளி" ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்க் கவிதையில் யாப்பு - மரபு குறித்த "தமிழ்ஒளி"யின் மதிப்பீட்டை, இரகுநாதன் மறுத்து எழுதிய கட்டுரை - விவாதங்கள் இந்தத் தலைமுறையினர் அறிய வேண்டியவை.
"தமிழ்ஒளி" கவிஞர் மட்டுமல்லர்; கட்டுரையாளர், பத்திரிகையாளரும் கூட.
"தமிழ்ஒளி" எழுதிய கவிதைகளை பிற்காலத்தில் திரட்டித் தொகுத்து வெளியிடப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டவர்தான் செ.து. சஞ்சீவி.
கவிஞர் மறைவுக்குப் பிறகு கவிதை, கட்டுரை, காப்பியங்கள், குழந்தைகளுக்கு எழுதியவை அனைத்தையும் பெரிதும் முயன்று சேகரித்து நூல் வடிவில் கொணர்ந்தார்.
"தமிழ்ஒளி"யின் கவிதைகளை வெளியிடுவதாகக் கூறி, இரண்டு கவிதைத் தொகுதிகள் அளவுக்கு "தமிழ்ஒளி"யிடமிருந்து நூலாக வெளியிடப் பெற்றுக்கொண்ட ஓர் அன்பர், "தமிழ்ஒளி"யின் அரசியல் கொள்கை பிடிக்காததன் காரணமாக, அந்தக் கவிதைக் கருவூலம் "தொலைந்து போனதாக"க் கூறியது தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
ஆனால், மா.சு.சம்பந்தம் என்பவர், "தமிழர் பதிப்பகம்" என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை நிறுவி, "தமிழ்ஒளி"யின் கவிதைகளை வெளியிட்டார்.
அவருக்காக மிகக்குறுகிய காலத்தில் எழுதிய காவியம்தான் "வீராயி". வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்க நாட்டின் தேயிலைத் தோட்டத்திலும் இரப்பர் தோட்டத்திலும் தமிழ்மக்கள் அடைந்த துயர நிகழ்ச்சியின் ஒரு சம்பவமே "வீராயி".

  • கவிஞனின் காதல்
  • நிலைபெற்ற சிலை
  • வீராயி
  • மேதின ரோஜா
  • விதியோ வீணையோ
  • கண்ணப்பன் கிளிகள்
  • புத்தர் பிறந்தார்
  • கோசலக்குமரி
  • மாதவி காவியம்
ஆக ஒன்பது காவியங்களைப் படைத்துள்ளார்.
படைப்பிலக்கியத்தின் மற்ற பகுதிகளிலும் "தமிழ்ஒளி" தம் புலமையை நிலைநாட்டினார்.
அவருடைய உரைநடைப் படைப்புகளை நாடகங்கள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் என்று வரிசைப்படுத்தலாம்.
"தமிழ்ஒளி"யின் "காப்பியங்கள்" நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனைவர் ம.ரா.போ. குருசாமியின், "வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும், அருணகிரிநாதரையும், அண்ணாமலை ரெட்டியாரையும் நினைவூட்டும் கவிஞர், "தமிழ்ஒளி" ஒரு சந்தக் களஞ்சியம். எல்லா வகையிலும் சிறந்து பொலிந்த இவர் இன்று இருந்திருந்தால், மரபு வழியுணர்ந்த புதுக்கவிதை வாணராகப் புகழ் பூத்தவராய் விளங்கியிருப்பாரே! அநியாயமாகத் தமிழ் உலகம் இழந்துவிட்டதே!'' என்ற கூற்று நம் விழிகளை நனைக்கிறது.
"தமிழ்ஒளி"யின் ஆழ்ந்த புலமைக்கு அவர் படைத்த மூன்று ஆய்வு நூல்களே சான்று.

  • சிலப்பதிகாரம் காவியமா, நாடகமா?
  • திருக்குறளும் கடவுளும்
  • தமிழர் சமுதாயம்
ஆகியவற்றில் தம் வாதத் திறமையாலும், தக்க சான்றுகளாலும் தாம் எடுத்த தலைப்புக்கு நியாயம் தேடியுள்ளார்.
கவிஞரின் படைப்புகள்:-
  • காவியங்கள் 7
  • கவிதைத் தொகுப்பு 4
  • குழந்தைப் பாடல்கள் 1
  • ஆய்வு நூல்கள் 4
  • கதைத் தொகுப்புகள் 4
  • நாடகம் 1.
1962ஆம் ஆண்டுக்குப் பிறகு கவிஞர் "தமிழ்ஒளி"யை எலும்புருக்கி நோய் தாக்கியது.
பத்துமாதம் காசநோயுடன் போராடினார்.
1985ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அவர் ஆவி பிரிந்தது.
61 வயதில் கவிஞர் "தமிழ்ஒளி"யின் வாழ்வு முடிந்தது.
ஆனால், அவருடைய கவிதைகளின் வாழ்வு?
அது தமிழ் மக்களின் கையில் இருக்கிறது.
                                                                                                                  கலைமாமணி விக்கிரமன்
                                                                                                                                                                                நன்றி:- தினமணி

Sunday, September 23, 2012

ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை



திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.

கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

-புதுவைப்பிரபா -

பேனர்



தற்போது-
அனேக விசேஷங்களையும்
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது
"பேனர்"

மணமகளே இல்லாமல் கூட
திருமணம் நடக்கும்
பேனர் இல்லாமல்?

பிரபலங்களின்
பிறந்தநாள் விழா
தொழிலதிபர் வீட்டு
பூப்பூ நீராட்டு விழா
காதணி விழா-
குடிபுகு விழா-
எல்லாவற்றிற்கும்
பிரமாண்டமான பேனர்கள்

ஏழு- பதினாறு- முப்பதாம் நாள்
துக்கத்திற்கும்
கண்ணீர்துளி சொட்டும்
கருப்பு வெள்ளை பேனர்கள்

அடச்சீ!
ஒரே ஒரு
சடங்கிற்குத்தான்
இன்னும் யாரும்
பேனர்வைக்கத்
துணியவில்லை

ஆனால்...
ஆடம்பரத்தின்
அடையாளமாக
விளம்பர மோகத்தின்
வெளிப்பாடாக
விளங்கும் பேனர்களின்
மீதான ஆத்திரம்
அடங்கிப்போகிறது-
ஆர்ப்பாட்டமில்லாமல் அது
ஓட்டைக்குடிசைகளுக்கு
திரையாகிடும்போதும்
ஏழைக் குளியலறைக்கு
சுவராகிடும்போதும்.


புதுவைப்பிரபா-

Saturday, June 30, 2012

மழையெனப்படுவது…




ஆகாய மலையிலிருந்து
ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
நிலப்பரப்பில்-
மேடெது பள்ளமெது என்று
அறிய உதவும் கருவி.

மேகப் பிள்ளைகள்
மோதிக்கொள்வதைப் பார்த்த
வானத் தாயின் அழை!
காலம் -
பூமியை கௌரவித்து போர்த்தும்
நீர் ஆடையின் இழை!

நீர் மை ஊற்றி
வானம் வரையும்
நேர்கோட்டோவியம்.
மண் மன்னனை மகிழ்விக்க
காற்றுப் புலவன் படைக்கும்
ர்20 காவியம்.

தொண்டை வரண்டு கிடக்கும்
நதிகளின்
தாகம் தீர்க்கும் பானம்.
அது-
ஆகாயப்பானையிலிருந்து
பொங்கி வழிகிற வானம்.

அறிவியல்பூர்வமாய்
பார்க்கப்போனால்
அதன் பெயர்
நீரியல்சுழற்சி
அப்படியே பார்த்தால்-
தூறல் பாட
இடி இசையமைக்க
மின்னல் நடனமிட
அது இயற்கையின்
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி

உச்சி வானத்தையும்
தாழ கிடக்கும் பூமியையும்
இணைக்கும்
சமத்துவ பாலம்
மேலிருந்து விழுந்து
மண்ணுக்குள் நுழைந்து - பின்
செடி-கொடி-மரம்-புல்-பூண்டென
முளைத்து வருகிற ஞாலம்.


புதுவைப்பிரபா

Monday, June 18, 2012

நடிகை தமனாவின் தீவிர ரசிகன் ஒருவன்...கனவுலகில்... தமனாவின் காதலனாக மாறி...கற்பனையில் பாடுகிறான். இதை பாட்டுக்கான களமாக வைத்து புனையப்பட்ட பாடல் இது....

http://www.youtube.com/watch?v=N1Wvag0zTuA&feature=plcp

Monday, May 7, 2012

கடவுள்... பற்றி   நான் எழுதி இசைத்த பாடல்
http://www.youtube.com/watch?v=rD1wBx7XN3E&feature=relmfu  
காதல் பற்றிய எனது சொந்த மெட்டை - வரிகளை - குரலை சுமக்கும் ஒரு  பாடல்
http://www.youtube.com/watch?v=U1DpZ5_jT0U&feature=youtu.be
காதல்  சைக்கோ இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள எனது பாடல்
http://www.youtube.com/watch?v=nAYo5afr-24&feature=youtu.be