Tuesday, October 29, 2013

ரூபனின் மாபெரும் கவிதைப்போட்டிக்கான கவிதை - " நாம் சிரித்தால் தீபாவளி "




ஆறேழு மாசமா
ஆல மூடி கெடக்குது
அங்க இங்க வேல செஞ்சி – குடும்பம்
கௌரவமா நடக்குது


போன பண்டிகைக்கு
போட்டு வச்ச துணியிருக்கு
சாயந்தான் போகலியே
புதுசா துணியெதுக்கு ?

உங்கம்மா வேல பார்க்கும்
வீட்டுல தருவாங்க
நீ வேணா பாரு – அவுங்க
லட்டோட வருவாங்க

அன்னிக்கி பேய்மழை
பெய்யும்னு டீ.வியில
ரமணன் சொல்லிட்டதால்
பட்டாசு தேவையில்ல

கடன் வாங்கி தீவாளி
கொண்டாட மனசு இல்ல
போலி ஆடம்பரம்
தேவையா சொல்லு புள்ள ?


ஏழ்மையிலும் நம் உள்ளம்
நெசமாவே சிரிக்கும்
அதுல பாரு சந்தோசம்
மத்தாப்பா தெறிக்கும் 
-----------------------------

 புதுவைப்பிரபா