Friday, January 8, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை


அர்த்தம் கெட்ட அகராதி

வழக்கமான நேரத்திற்கு
நீ படுக்கையைவிட்டு எழாதபோது
கழுத்திடுக்கில் கை வைத்துப் பார்க்கிறேன்
"காச் மூச்சென்று " கத்துகிறாய்

குளியலறையில் நீ இருக்கும்போது
எத்திசையில் இருந்து பெரும் சப்தம்
எழுந்தாலும்
"என்னங்க ஆச்சு" என்று
துடித்துப்போய் கேட்கிறேன்.
காதில் விழாததுபோல் மௌனம் காக்கிறாய்.

வீட்டிலிருந்து புறப்பட்டுபோய்
மணிநேரம் ஆனதும்
கைப்பேசயில் அழைத்து
"பத்திரமாக ஆபீஸ் போய்ட்டீங்களா?"என்று
கேட்டு முடிப்பதற்குள்
"ம்ம்" என்று முடிக்கிறாய்.

மதிய உணவில்
உப்பு புளி காரம்
சரியாக இருந்ததாயென்று
கேட்கபதற்கான என் அழைப்பிற்கு தவறாமல்
"ஸ்விட்ச் ஆ ப் " என்று
பதில் வந்து விழச்செய்கிறாய்.

வீடு திரும்பியதும்
உன் விரல் நுனியில் பட்டிருக்கும்
மையைக் காயமென எண்ணி
"ஐயையோ! " ஏன்று எட்டித்தொடுகையில்
கொதிகலனை தொட்டது போல்
விருட்டென்று விரல் இழுத்து
முகம் சுளிக்கிறாய்


இந்த ஓரிரு செய்கைகள் போல்
ஓராயிரம் செய்கைகள்
நடந்தேறியிருக்கிறது
இவைகளை நான்
"அக்கறை"
என்று அர்த்தப் படுத்திகொள்கிறேன்

ஆனால்
உன் அர்த்தங்கெட்ட அகராதியில்
இதற்கெல்லாம் பெயர்
"தொந்தரவு"

Thursday, January 7, 2010

விடியுமா ?



நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்

பட்டணத்தில் பொறந்துபுட்டு கஷ்டம் நஷ்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூணுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்

கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்

கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்

ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்

ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?


- புதுவை பிரபா -