Monday, May 31, 2010

செத்து மிதக்கும் வார்த்தை


ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கால்களுண்டு

சுமக்கும் தோள்களில்
தோல் பிய்க்கும் நகங்களுண்டு

கரையேற்றும் படகின் மீது
காரிகாரித் துப்புவொருண்டு

உதவிக்குவரும் வாகனங்களில்
பாகங்களை கழற்றிக்கொண்டு
இறங்கிச்செல்வோருண்டு

துயர நேரங்களில்
துணைக்குவரும் கைகளில்
விரல் பிடுங்கிச்செல்கின்ற
விபரீத மனிதருண்டு

தினம்தினம் இதுபோன்ற
நபர்களைக் கொண்டே
நகர்த்தப்படுகிறது பெரும்பாலானோரின்
வாழ்க்கை.
இனி இவர்களின் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களையே பிரசவிக்கும்
ஏனெனில்-
நிகழ்காலக்கடலில்
செத்து மிதக்கின்றது
நன்றி என்னும் வார்த்தை.

நானும் நீயும்


கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை

கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை

நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை

புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை

குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!

ஏழ்மையின் ஏகாதிபத்தியம்


இருநூறு பிள்ளைகள்கொண்ட
தொடக்கப்பள்ளியில்-
ஆயா வேலை

உணவு ஊட்டுதல்
தூங்க வைத்தல்
கால் கழுவி விடல்
வாந்தி வாரி கொட்டுதல்
எல்லா வேலைகளுமே
சுகமாக தோன்ற-

பெருங்சுமையாய்
எனக்குள்ளே
கனக்கின்ற கேள்வியொன்று-
ஏழ்மையின் ஏகாதிபத்தியம்
என்னை
முதிர்கன்னியாக்கி
அம்மாவாக்கமலேயே
ஆயாவாக்கிவிட்டது எதனால்?

மே தினம் அன்று.. ஒரு தொலைக்காட்சியில்..

Sunday, May 2, 2010

மகளீர் மசோதா


பெண்ணே!
நாடு - நதி
மண் - மலை
ஏன்?
உலகே உன் பெயரால்தான்
குறிக்கப்பெருகிறது.

மென்தென்றல்
வன்புயல்
மல்லிகை
மலைத்தேன்
பால்நிலவு
பனிப்பொழிவு
மொழியின் மொத்த வார்த்தைகளில்
எத்தனை விழுக்காடு
உனக்கு உவமையாய். . .
உருவகமாய்…

பெண்ணே!
பெருமைப்படு
உலகமா உன்னை பெற்றெடுத்தது?
இல்லையில்லை. ..
நீதானே உலகத்தை பெற்றெடுத்தாய்?

அடுப்படிதாண்டிய
ஐம்பதாவது ஆண்டு விழாவை
கொண்டாடி முடித்துவிட்டார்கள்
நம் இந்தியச் சகோதிரிகள்
ஆனாலும் இவர்களுக்கு
இன்னுமும் இருக்கிறார்கள்
அரசியல் எதிரிகள்

புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!

பாராளுமன்றத்தை
நல்வழியில் நடத்துகிறாள்
பால்வழிப்பாதையில்
கோள்களைக் கடத்துகிறாள்
உலகவிளையாட்டரங்கில்
முதல் பரிசு பெறுகிறாள்
உயிர் பயம் துளியுமற்று
இராணுவத்திற்கு வருகிறாள்....
ஓவியம் தீட்டுகிறாள்….
தொடர்வண்டி ஓட்டுகிறாள்…
பேனா பிடிக்கிறாள்…
பிணத்தை எறிக்கிறாள்….

புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!

வெற்றிபெற்ற ஆண்களின் பின்னால்
பெண்கள் இருந்த காலம்மலையேறிற்று.
தற்போது-
பெண்களே வெற்றிமலையேறும்காலம் வந்திற்று.

இதையெல்லாம் உணராமல்
உளறித்திரியும் ஒருசிலரை
திருத்தவே முடியாது
இவர்களின் வெற்றுப்புலம்பலால்
பெண்களின் முன்னேற்றத்தை
நிறுத்தவே முடியாது

அவர்கள் கிடக்கிறார்கள்
ஆறாம் அறிவை அடகுவைத்தவர்கள்!

கவலையைவிடுங்கள்!
காற்றிடம் கொஞ்சம் காதுகொடுங்கள்!
ரகசியம் ஏதோ சொல்கிறது.
நான்வேண்டுமானால் கேட்டுச்சொல்லவா?

பெண்ணடிமைவாதிகளைப்பற்றி
தற்போதைக்கு கேள்வியில்லையாம்
மசோதாவே தோற்றாலும்
எம் மகளீர்க்கு தோல்வியில்லையாம்.

புதுவைப்பிரபா