Monday, September 15, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான கவிதை
அழுகுரல் ஓய்ந்தபாடில்லை

அழுகையின்
அதிர்வெண்ணும் அடர்த்தியும்
அவ்வப்போது மாறுபடுகிறதே தவிர
அறவே அற்றுப்போகவில்லை

வடகிழக்கிலிருந்து
ரசிக்கமுடியும்படியான
பச்சிளங்குழந்தைகளின் அழுகுரலும்
தென்மேற்கிலிருந்து
பயங்கொள்ள வைக்கும்
பெரியவர்களின் அகோர அழுகுரலும்
கேட்டபடியே இருக்கிறது.

வருகையை பதிவுசெய்ய
ஒருவித அழுகையும்
வெளியேற்றத்தை உறுதி செய்ய
ஒருவித அழுகையுமாய்
அந்த வளாகத்திலிருந்து
அழுகைகள் அணிவகுக்கின்றன

அந்த மருத்துவமனையின்
பிரசவ அறைக்குள்ளிருந்து வருகிற
மெல்லிய சங்கீத அழுகைக்கும்
பிணவறைக்கு வெளியிருந்து பரவுகிற
கனத்த ஓல அழுகைக்கும்
இடைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது
நமக்கான வாழ்க்கை.


புதுவைப்பிரபா

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான படக்கவிதை

அழகென்ற சொல்லுக்கு
அர்த்தம் தருபவளே !
மூடிய விழிக்குள்ளும்
முழுவதுமாய் வருபவளே !

உன் காந்த விழிப்பார்வை – என்
எண்ணத்தை ஈர்க்குதடி
உனை பார்க்கும் நொடிப்பொழுதில்
நுரையீரல் வேர்க்குதடி 

உன் உதட்டில் பூத்திருக்கும்
மெல்லிய புன்னகைப்பூ
அதை பார்க்கின்ற உன் கூடை
பூவிற்கும் பொச்சரிப்பு

பெண்ணே....!

நீ சாய்ந்திருக்கும் கதவாக
நான் ஆகக்கூடாதா ?
உன் விரல் பட்ட வரத்தாலே
என் ஆயுள் கூடாதா ?

புடவை கட்டி நிற்கும் பொன் நகையே!
பூகம்பம் நிகழ்த்தும் புன்னகையே !
உன்னால் ...
ஹார்மோன்கள் சுரக்கிறது
சுயம் எனக்கு மறக்கிறது
ஒவ்வொரு ‘ செல்’ லும் என்னுள்
ரெக்கைகட்டி பறக்கிறது  


உன் அழகுநீர் பாய்ந்து பாய்ந்து
என் கற்பனை செழிக்கிறது
உனை வர்ணிக்க வார்த்தை இன்றி
என் தாய்மொழி  விழிக்கிறது


பாரடி..

இந்த  கவிதைகூட அழகாச்சு
உன்னோடு பழகி
ஐயம் ஏதுமில்லையடி -நீ
பிரபஞ்ச பேரழகி

---------------------------------------------- 

புதுவைப்பிரபா

Saturday, September 13, 2014

இளைய தலைமுறைபேருந்து நிறுத்ததில்
நின்றுருந்த போது
அறுவது வயதை தாண்டியவர்
அருகில் வந்து நின்றார்
புகையிலை நெடி
குமட்டிகொண்டு வந்தது

ஐம்பது வயது ஆசாமி
பின் பக்கம் வந்து நிற்க
பிராந்தி நாற்றம்
குடலை பிரட்டியது

நாற்பது வயது கொண்டவர் வந்து
நான்கு அடி தள்ளி நிற்க
நிக்கோட்டின் வாடை
நெஞ்சை அடைத்தது

அப்போது அங்கு வந்த பேருந்தில்
மூவரும் ஏறிக்கொள்ள
"அப்பாடா" என்று
ஆசுவாசப்பட்ட நொடி

இருபதுவயது இளைஞன்
அருகில் வந்து நின்றான்

இப்போது
ஒருசேர
அந்த மூன்று நாற்றமும் அடித்தது.

----------------------------------------------------------------------------
 புதுவைப்பிரபா

பிரியும் வரம் வேண்டும்என் இருத்தலை
இல்லாமலாக்கும் மரணம்
எப்படியும் வரலாம்

பயண விபத்தில்
மண்டை நசுங்கி
குருதியோடு மூளையும்
வெளி வழிந்தோ...
அல்லது
வெடிகுண்டில் சிக்கி
உடல் பிய்ந்து
குடல் சிதறியோ...

அறிந்தவர்களின் ஆத்திரத்தால்
அல்லது
அறிந்திராதவர்களின் அவசரத்தால்
கழுத்தறுபட்டோ
அல்லது
துப்பாக்கியால் சுட்டோ...

மருத்துவத்திற்கு கட்டுப்படாத
புற்றுநோயாலோ
அல்லது
தொற்றுநோயாலோ...

கவனக்குறைவால்
மலையிலிருந்து கால் இடறியோ
அல்லது
நீர்நிலைக்குள் மூச்சுத்திணறியோ...

அவமானத்தின் ஆணைக்கு
அடிபணிந்து
அல்லது
வெறுப்பின் உச்சத்தில்
மதி இழந்து
கோழைத்தனமான
தற்கொலையினாலோ...

மரணம் எனக்குள்
ஒருநாள் தோன்றும்

ஆனால் என் ஆசையெல்லாம்-
இதுபோன்று ஒரு
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போதே
எந்தன் உயிர் பிரிந்துவிட வேண்டும்.

----------------------------------------------
புதுவைப் பிரபா