Wednesday, October 31, 2012

திருமணம்-- ஹக்கூ

ஆகாதவர்கள் ஆகவில்லையே என்றும்
ஆகிவிட்டவர்கள் ஆகிவிட்டதே என்றும்
வருதப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

புதுவைப்பிரபா

விவாகரத்து செய்யுங்கள்



அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்

குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்

இன்னும்..இன்னும்…

இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.

அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!

திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்

சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்

நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம் 
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம் 
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்

விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்

புதுவைப்பிரபா

நான்காம் கண்


எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்
என்னைச்சுற்றிவர-
தண்ணீர் பானையை
என் தோளில் சுமத்தி
கத்தியால் கொத்தி
முதல் கண்ணை திறந்து
சுற்றிவரச் சொல்கிறான்
ஈமச்சடங்கு செய்பவன்

என் பிடியிலிருக்கும்
வாழ்க்கைப் பானையிலிருந்து
பீச்சி அடிக்கிறது
மண்ணாசை.

இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
இன்னொரு கண்ணை திறக்கிறான்.
கொட்டி தீர்கிறது
பொன்னாசை

கடைசி சுற்றிலும்
ஒரு கண் திறந்துவிடுகிறான்
வடிந்து அடங்குகிறது
பெண்ணாசை

பின்-
பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
ஓங்கி தரையில் அடிக்கிறேன்
வெறும் காற்றடைத்திருந்த பானை
சிதறி தெறிக்கிறது

அதில் ஒரு சில்
என் மேல் பட்டதும்
கலைகிறது கனவு

மெல்ல திறக்கிறது
என் நான்காம் கண்

புதுவைப்பிரபா