Sunday, August 8, 2010

தொலைதூரக் காதல்

எல்லையிலே துப்பாக்கி
ஏந்தி நிக்கும் எம் மாமா
இந்த கொல்லைபுரத்தழகி
ஒன பார்க்க வரலாமா?

ஆண்டுக்கு ஒரு முறைதான்
கிராமத்துக்கு நீ வருவ
அந்த இருபது நாளுலதான்
எங்கண்ணில் நீ படுவ

சொற்ப நாட்கள் அது
சத்தியமா போதல
தவணை முறையிலெல்லாம்
சொல்லலாமா காதல?

எனக்காக ஏங்கறையோ - இல்ல
குறட்டைவிட்டு தூங்கறியோ
உன்னோட நெனப்பால – நான்
படும்பாட்ட கேட்கறீயா?

மலைக்கோயில் போனாக்கா
பாறையில நீ தெரிவ
கண்மூடி படுத்தாக்கா
எம் மனசெல்லாம் நீ நெறைவ

உன் கடுதாசி தலைக்கு வச்சி
படுத்தாக்கா நீ வருவ
உன் போட்டோவ வச்சிக்கிட்டா
கனவில்வந்து எனை தொடுவ

கண்ணாடி பார்க்கையில
எம் பின்னாடி நிக்கறியே
தலைவாரும்போதெல்லாம்
நீ சீப்பில் வந்து சிக்கறியே

என்னோட தலையணைக்கு
உன் தலை வந்து முளைக்குது
அது அப்பப்போ கீழிறங்கி
என் தூக்கத்த கலைக்குது

நீ முரட்டு முத்தமிட
நான் துடிச்சு சத்தமிட
ஆசையா இருக்குதைய்யா
உன்னோடு யுத்தமிட

அருகிலிருந்தாலும்
ஆயிரம் மைல் தள்ளிஅப்பால இருந்தாலும்
உன் நெனப்பு அச்சில்தான்
என்னுலகம் சுத்துது

நமக்கு நடுவால
இருக்கிற தூரத்தால
ஏக்கம் பெருக்கெடுத்து
அழறேன் பிரிவு பாரத்தால

தனிமை கொல்லுதென்ன
புரிஞ்சிக்கோ என் தலைவா!
பிரிஞ்சிருக்க முடியலையே
நீ வர்றீயா நான் வரவா?

-புதுவைப்பிரபா-

Sunday, August 1, 2010

இணையதள கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு



ஈகரைத் தமிழ் களஞ்சியம் என்னும் இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் தொலைதூரக் காதல் என்னும் தலைப்பிலான எனது கவிதைக்கு இரண்டாம் பரிசு. . . . மேலும் விவரங்களுக்கு. . .கீழே காணும் சுட்டியை சொடுக்கவும்
http://www.eegarai.net/-f48/3--t35942.htm