Wednesday, September 30, 2015

நாகரீகத்தின் ஆதிக்க மிருகம் -‘வலைப்பதிவர் திருவிழா – 2015-புதுக்கவிதைப் போட்டிக்காக’

பண்பாடு என்பது
திருந்திய ஒழுக்கம்
ஆனால்..
இன்று ஒழுக்கம் திரிந்து-
பண்பாட்டின் பரப்பில்
பைத்தியம் பிடித்து
திரிந்துகொண்டிருக்கிறது

நாகரீகத்தின்
ஆதிக்க மிருகம்
பண்பாட்டை பதம்பார்த்து
பசி தீர்த்துக்கொண்டிருக்கிறது

உலகம்...
இப்போது –
மயானமாக
மனநோயாளிகளின் கூடாரமாக
மாறிக்கொண்டிருகிறது

வீட்டிற்கு வந்த விருந்தாளிகள்
விளம்பர இடைவெளியின்போது மட்டும்
விசாரிக்கப்படுகிறார்கள்

நம்பிக்கை துரோகம்
நட்புக்குள்
புற்றுநோய்போல்
புரையோடிக்கிடக்கிறது

வீரம் என்கிற வார்த்தைக்கு
ஆண்மக்கள்
அகராதி புரட்டி
அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

வீதியெங்கும்
கூவிக்கூவி
விற்கப்படுகிறது
காதல்.

சிதைத்தழித்து
சின்னாபின்னமாகி கிடக்கிறது
தமிழ்.

ஆம்.
இதற்கெல்லாம் காரணம்...
பண்பாட்டிற்கு
சங்கூதவந்திருக்கும்
சமீப கால ஊடகங்கள்

வாய்க்கரிசிபோடுதற்காய்
வரிசையாய்  வந்து நிற்கும்
வணிக நிறுவனங்கள்

தோழர் தோழியரே....
விழிப்போடு இருங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட
கால வேரிலிருந்து
துளிர்த்தது தமிழர் பண்பாடு
உணர்தோமா நாம்?
அது நம்மிடம் சிக்கி படும்பாடு

வரலாறின் உயிர்ப்பு
பண்பாட்டிலிருக்கிறது
என்பதை உணர்வோம்
பாதை மாறி
பயணித்துக்கொண்டிருக்கும்
நம் பண்பாட்டை மீட்டுக்கொணர்வோம்

இன்று சபதமெடுப்போம்
பண்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும்
செயல்கள் செய்ய நாணவும்
உடலில் உயிர் உள்ளவரை
தமிழர் பண்பாட்டை பேணவும்

புதுவைப்பிரபா 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’-              ( புதுக்கவிதைப் போட்டி )க்காகவே எழுதப்பட்டது.

என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்


புதுவைப்பிரபா