திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.

கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

-புதுவைப்பிரபா -