Friday, July 19, 2013

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டிபிரபஞ்ச பேரழகிக்கு…
இதயம் எழுதுகிறேன். உன்னைப் பார்த்து இரண்டு நெடுநாட்கள் ஆகிவிட்டது. உனக்குத்தான் தெரியுமே, என் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் கூட அடுத்தபட்ச தேவைதான். முதற் தேவை உன் பத்து நொடி பார்வை. அது இல்லாமல் பேரவஸ்தையாய் இருக்கிறது.

நெருக்கிய உறவினன் ஒருவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காய் நீ பயணம் மேற்கொண்டிருப்பது அறிவுக்குத் தெரிகிறது. ஆனால் அகத்திற்கு தெரியாமல் அது இறந்தவனை திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறது. நமக்கு வாய்க்கவிருக்கும் மரணம்கூட நம்மை பிரித்துவிடக்கூடாது என்கிற எண்ணம் கொண்டிருக்கும் எனக்கு யாரோ ஒருவனின் மரணத்தால் இரண்டு நாட்கள் பிரிந்திருப்பதில் பெருத்த எரிச்சல்.

சரி. எப்படி இருக்கிறாய் நீ? என்போன்றே உனக்கும் விழிமூடிக்கிடக்கையிலும் விளக்கெரிதல் தெரிகிறதா? கண் திறந்து திரிகையிலும் கனவுகள் விரிகிறதா? ஆம். காதல் ஒருவருக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம். அப்படி ஒரு நிகழ்விற்கு அத்தாட்சியாய் உனை பற்றி நான் சிந்தித்து எழுதியிருக்கும் வரிகள்…

அழகென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமலே
இத்தனை நாள் வாழ்ந்து வந்தேன் நான்
உன்னை நான் பார்த்ததும் உணர்ந்துகொண்டேன் உண்மையை
என் கடந்த கால வாழ்கையெல்லாம் வீண்

அழகென்ற சொல் உன்னால் பெயர்ச்சொல் ஆனது
இலக்கணம் மாறிப்போனது….

எப்படி இப்படியெல்லாம்? என்று நீ ஆச்சரியப்படுவதுபோலவே எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்வது? இது காதல் அத்தியாயத்தின் கிறுக்கல் கூத்து.

கடந்த 172800 நொடிகளில் நான்கு குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பியிருக்கிறாய் நீ. பதிலுக்கு நானும். தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பிய வண்ணம் இருந்தால் நேரில் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தீ பற்றிக்கொள்ளும் பேராபத்து இருப்பதால் இருவரும் தவிர்க்கிறோம். தவிர்த்துவிட்டு ரகசியமாய் தவிக்கிறோம். குறுங்செய்தி என்று சொல்லும்போதுதான் நினைவிற்கு வருகிறது, நேற்று நடந்தது. காலை பத்து மணி அளவிற்கு உன் கைப்பேசிக்கு அழைப்பு அனுப்பினேன். அப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்று வந்தது. இயந்திரத்தின் குரல் அஃது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆம். என் தொடர்பின் எல்லையிலிருந்து நீயோ அல்லது உன் தொடர்பின் எல்லையிலிருந்து நானோ விலகியிருப்பதென்பது சாத்தியமற்றது- என்னுள் நீயும் உன்னுள் நானும் இருந்துகொண்டிருப்பதால். கைப்பேசி நிறுவனத்தின் பதிவிடப்பட்ட குரலாக மட்டும் இல்லாமல் மனித குரலாக இருந்திருந்தால் குரல்வளையை கடித்து குருதிகொட்ட வைத்திருப்பேன்.

அதுசரி…வேலைக்கு இடையில் தொலைபேசி அழைப்பெல்லாம் எதற்கு என்று கேட்கிறாயா என்ன? நிரம்பி வழிந்தாலும் கூட, ஓடிப்போய் தொற்றிக்கொண்டு படியிலே பயணிக்கும் ஒர் பயணிபோல
வேலைச்சுமை பிதுங்கி வழிகிற என் வாழ்க்கைப்பயணத்தில்
தொற்றிக்கொண்டே வருகிறது  உன் நினைவுகள்.எனக்குள்ளான உன் நினைவுகளின் வீரியம் வியக்கத்தக்கதாகவே இருக்கிறது. ஆம். நேற்று மாலை நாம் வழக்கமாக அமர்ந்து பேசும் கடற்பாறைகளின் மேல் அமர்ந்திருந்த நொடியில்-
உன்னிடம் இருக்கும் சுடிதார்போன்றே அணிந்து போனாள் ஒருவள். உன்போன்றே இடப்பக்கம் மூக்குத்தி போட்டு போனாள் இன்னொருவள். உன்னைப் போலவே மூவர்ண பொட்டு வைத்து நகர்ந்தாள் ஒருவள். பாதைக்கும் பாதத்திற்கும் வலிக்காமல் நடப்பாயே, அதுபோலவே நடந்துபோனாள் ஒருத்தி. நொடிக்கு இரண்டு முறை துப்பட்டாவின் இருப்பிடத்தை நீ சரிசெய்து நடப்பதுபோலவே நடந்தாள் இன்னொருத்தி. இப்படி என்னை கடந்து போன அத்தனை பெண்களிளும் தவறாமல் தெரிந்தாய் நீ. எனக்கென்னவோ எல்லா உடல்களும் உன் முகத்தை சுமப்பதாகவே தெரிகிறது.

நாட்களின் ஓட்டத்தில் நான் அதிகம் நேசிக்கத் தொடங்கிவிட்டேன் உன்னை. அறவே மறந்துகொண்டிருக்கிறேன் என்னை. மந்திரம்போல் ஒரு நாளில் ஒரு லட்சம் முறை உச்சரித்துவிடுகிறேன் உன் பெயரை. யாரேனும் “பெயர்?” என்று கேட்டால்கூட என் பெயருக்கு பதில் உன் பெயரைச் சொல்லிவிடுகிறேன். அப்புறம் அதை சமாளிக்க காரணங்கள் அள்ளி விடுகிறேன். இவை.. கவலைக்குரிய நிகழ்வுகள் இல்லை. மாறாக காதல் கலைக்குரியவைதான்.
புதுப்பேனா ஒன்று வாங்கியதும் உன் பெயரை எழுதிப் பார்ப்பதும் பின் ரகசியமாக அதன் பின்னால் என் பெயரை சேர்ப்பதும், சின்னக் கொலுசொலி கேட்டால்; நான் ஓடிவந்து பார்ப்பதும் அங்கே நீயில்லை என்றால் நான் மரணம் கேட்பதும் நம் காதல் பயணத்தில் சம்பவ நிறுத்தங்களாய் உள்ளன. உனக்கு நினைவிருக்குமென்று நினைக்கிறேன். காதல் உந்தத்தில் நான் முதன் முதலில் கிறுக்கிய வரிகள்?
பார்…
அல்லது
பார்க்காமல் இரு

கேள்…
அல்லது
கேட்காமல் இரு

சிரி;…
அல்லது
சிரிக்காமல் இரு

தொடு;…
அல்லது
தொடாமல் இரு

காதலி…
ஆனால்
காதலிக்காமல் மட்டும் இருந்துவிடாதே!


இப்போதும் கூட இதையேதான் எதிர்பார்க்கிறேன். காலம் நம் காதலுக்கு முன் கொண்டுவந்து கிடத்தும் பிரச்சனைக் குழந்தைகளை பத்திரமாய் கையாள வேண்டும். காதலுக்காக எதைவேண்டுமானாலும் விட்டுக்கொடுத்துவிடலாம். ஆனால் எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்கக் கூடாது, நாம்.

நினைத்துப் பார்க்கக்கூட துணிவில்லை எனக்கு, நீயில்லாத உலக வெளியை. அப்படி நினைப்பதே ஏற்படுத்துகிறது உயிர், உடல்விட்டு வெளியேறும் வலியை. ச்ச்சீ… எதற்காக இப்படியெல்லாம் நினைக்கத்தொடங்கிவிட்டேன். இரு. இத்தகைய எண்ண ஓடையிலிருந்து கரையேறிவர உன் நினைவுப் படகைதான் நான்  பயன்படுத்தியாக வேண்டும். ஆம். இந்த பிரபஞ்சத்தில்; பேராற்றல் கொண்டது, உன் நினைவுகள்.

பத்து பேரோடு நீ நடந்து போனாலும் எனக்கு உந்தன் உருவம் மட்டுமே தெரிகிறது. உன் பிம்பம் படும்போதெல்லாம் என் விழிலென்சு இரண்டு மில்லிமீட்டர் விரிகிறது. குனிந்துகொண்டிருக்கையில் எனை கடந்து நீ போகும் பொழுதுகளில் உன் அதிர்வுகளே என் தலை நிமிர்த்திவிடுகிறது. அன்னார்ந்து அரை நொடி பார்த்துவிட்டால் என் செல்கள் எல்லாம் சிலிர்த்து எழுகிறது. உன் முன் நெற்றியில்  வந்து விழும் முடியை நீ ஒதுக்கிவிடும்போதெல்லாம் அது பின்னால் போய் விழுகிறது. என் மனதோ உன்மேல் வந்து விழுகிறது. நீ நிற்கும் திசைப் பார்த்தே
என் மனசு குடைசாய்கிறது. அந்த இன்பப் பொழுதுகளில் என் காதல் கன்னுக்குட்டி உன் ஞாபகப் புல் மேய்கிறது.


ஐயோ…! உன்னை நினைக்க நினைக்க நயாகரா அருவியாய் கொட்டுகிறது கற்பனை. அதைவிட உடனே உன்னை நேரில் பார்த்தாகவேண்டும் என்கிற பேராவல் சுரக்கத் தொடங்கிவிட்டது. இந்த மின்மடல் பார்த்த நொடியிலிருந்து தொடங்கு  என்னை சந்திப்பதற்கான பயண முயற்சியை.

நேரில் தொடரும் ஆவலோடு காத்திருக்கும்
அன்புக் காதலன்

11 comments:

 1. நயாகரா அருவியாய் கொட்டும் காதல் - கடிதம் அருமை...

  போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய நல் உள்ளம் தனபாலன் அவர்களுக்கு நன்றி...

   Delete
 2. "புதுப்பேனா ஒன்று வாங்கியதும் உன் பெயரை எழுதிப் பார்ப்பதும் பின் ரகசியமாக அதன் பின்னால் என் பெயரை சேர்ப்பதும், சின்னக் கொலுசொலி கேட்டால்; நான் ஓடிவந்து பார்ப்பதும் அங்கே நீயில்லை என்றால் நான் மரணம் கேட்பதும் நம் காதல் பயணத்தில் சம்பவ நிறுத்தங்களாய் உள்ளன. "

  அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 3. காதலின் நுண்ணிய வெளிபாடு ரசிக்க வைத்தது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நாளை நிச்சயம் காதல் கடிதம் கருத்துடன் வருவேன் ஐயா! படித்தாளும் கருத்து இட நெஞ்சு பேனா மைபோல கணக்குது!ம்ம்

  ReplyDelete
 5. முதலில் இந்த மொடிரேசனை எடுத்து விடுங்கள் ஐயா!

  ReplyDelete
 6. மிகவும் ரசிக்க வைத்தது. கொஞ்சம் பாராக்களுக்கு நடுவே கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிட்டிருக்கலாம்.

  ReplyDelete
 7. வர்ட் வெரிபிகேஷன் வதைக்கிறது. கமெண்ட் இட இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா!

  ReplyDelete
 8. வரிக்கு வரி காதல் ரசம் சொட்டுகிறது ..அருமை நண்பரே..

  ReplyDelete
 9. //172800 நொடிகளில் நான்கு குறுஞ்செய்திகள் மட்டுமே
  இப்படிக்கூட ஏங்க முடியுமா! சபாஷ்.

  ReplyDelete
 10. //இன்பப் பொழுதுகளில் என் காதல் கன்னுக்குட்டி உன் ஞாபகப் புல் மேய்கிறது.// ரசிக்க வைத்தன இந்த வரிகள்.

  //காதலி
  ஆனால்
  காதலிக்காமல் மட்டும் இருந்து விடாதே!//

  இப்படி உருகி உருகி எழுதிய பின்னும் காதலிக்காமல் இருப்பாளா?

  //என் தொடர்பின் எல்லையிலிருந்து நீயோ அல்லது உன் தொடர்பின் எல்லையிலிருந்து நானோ விலகியிருப்பதென்பது சாத்தியமற்றது//
  புதுயுகக் காதலனின் காதல் கடிதத்தில் கூட பங்குபெறும் அலைபேசியின் தாக்கத்தை என்னவென்று சொல்வது?

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்


  ReplyDelete