Tuesday, November 1, 2011

ஏழையின் செல்வம் - சிறுகதை

வழக்கம்போல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் குடிசையைவிட்டு வெளியேறினான், தேசிங்கு। தற்செயலாய் தூக்கம் கலைந்ததும், தன் தந்தை புறப்படும் காட்சி கனகசபையின் விழித்திரையில் விழுந்தது. அடுத்தநொடி, அடித்து பிடித்து எழுந்து, "நைனா. . . . நைனா. . . . காசு கொடுத்துட்டு போ. . . நான்தான் நேத்து ராத்திரியே கேட்டேனே. . . . . கொடுத்துட்டுப்போ. . . "என்றான்.
பதில் ஏதும் பேசாமல், தேசிங்கு , வயல் சேலையில் ஜரிகையாய் ஓடும் ஒற்றையடிப்பாதையில் இறங்கி, விரைந்தான்.
"நைனா . . .. நான் இன்னா வாங்கித்துன்னவா கேக்கிறேன்? பொஸ்தகம் வாங்கனும்ன்னு தானே . . . இன்னிக்கும் நான் காசு கொண்டுபோய் கணக்கு வாத்தியாருகிட்ட குடுக்கலீன்னா. . . . பெறவு.. . . . பள்ளிக்கூடத்தில சேர்க்கமாட்டாரு.நைனா. . . . நைனா.. . . குடூ" தலையை சொறிந்துகொண்டே பின் தொடர்ந்தான், கனகசபை.
"அடிங்க . . . ஏதாவது கேட்க போறேன்டா. . . நான் தான் நேத்தே சொன்னேனில்ல . . . . என்னால காசு கீசு குடுக்க முடியாது. நீயும் இஸ்கூலுக்கு போக வேணாம். நானே அஞ்சாவது வரைக்கும்தானே படிச்சேன். அப்பால . . . நீ மட்டும் நெறைய படிக்கனும்ன்னு அடம் புடிச்சா? ஏழாவது வரைக்கும் படிச்சல்ல: அதுபோதும். இப்ப எட்டாங்கிளாசுக்கு நீ போறதாலதான அந்த வாத்தியான் காச கொடு, பணத்த குடுங்கிறான். நீ ஒன்னும் போகத்தேவையில்ல . . . . பெசாம, நாளையிலேர்ந்து என்கூட நீயும் ஓட்டலுக்கு வந்துடு, மொதாளிகிட்ட சொல்லி உனக்கு ஏதாவது எடுபுடி வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மாசம் நூறோ எறநூறோ . . . கிடைக்கும்"
சாதாரணமான வார்த்தைகளால் கனகசபையை சமாதானப்படுத்த முயற்சித்தான், தேசிங்கு. ஆனால் கனகசபையின் காதுகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிலமாய் விழுந்தது. அதில் அவனது கனவுக்கு மூச்சிதிணரல் ஏற்பட்டது.
"நைனா . . . ஒன்னால காசு தரமுடியாதுன்னு வேணா சொல்லு அதுக்காக . . . பள்ளிக்கூடத்தவிட்டு நிக்க சொல்லாதே. நான் படிப்பேன் . . . பெரிய படிப்பெல்லாம் படிப்பேன் . . . நீ ஒன்னும் தரவேணாம், பாஞ்சிருவாதானே பிச்ச எடுத்தாவது அந்த புஸ்தக காச நான் வாத்தியார்கிட்ட கொடுத்துட்டு. . . படிக்கிறேனா இல்லையான்னு பாரு. . . " துக்கம் அடைக்க தழுதழுத்து வந்து விழுந்தது வார்த்தைகள். தன் தந்தையிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல், திரும்பி நடக்க தொடங்கினான். தந்தையும் பிள்ளையும் தற்போது எதிர்எதிர்திசையில். நடையிலும் , எண்ணத்திலும்.
தேசிங்கு, 'ஆளைவிட்டால் போதும்' என்கிற போக்கில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம் நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். தன் கிராமத்தின் வழியாக நகரத்திற்கு செல்லும் முதல் பேருந்து சரியான நேரத்திற்கு வந்ததும் அதில் ஏறி அமர்ந்து பயணித்தான்;.
தேசிங்கு - நகரத்தில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் சர்வர். காலை ஆறு மணியிலிருந்;து இரவு பதினோருமணிவரை வேலை. ஆயிர ரூபா சம்பளம். வயல்வேலைக்கு சென்று பொருளாதாரத்தை ஈடுகட்ட உதவும் தாரம். ஒரு மகள் , ஒரு மகன்; மகன் கனகசபை மூத்தவன்.மாலை ஆறு மணி
டிபன் நேரம் என்பதால் ஓட்டலில் கூட்டம் வழிந்தது. வழக்கமான வேலைகளில் இருந்தான் தேசிங்கு. அந்த டேபிளில் தண்ணி டம்ளர் கொண்டுபோய் வைத்துவிட்டு, "சார் . . . . உங்களுக்கு என்ன வேணும்"என்றான். அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, "சூடா என்னப்பா இருக்கு"என்றார் அந்த பேண்ட் சர்ட் மனிதர்.
தேசிங்கின் சமவயதுகாரர் அப்படி பார்த்தது அவனுக்குள் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை. ஏனெனில் அவனுக்கும் அவரை அப்படி பார்க்கத்தோன்றியது.
"சூடா । . போண்டா. . .ஆனியன் பஜ்ஜி. . . மசால்வடை . . . ரோஸ்ட். . "நீட்டிக்கொண்டேபோனான்.
"ஒரு செட் போண்டாவும் . . . ஸ்ட்ராங்கா ஒரு காப்பியும் . . . "அந்த மனிதர் ஆர்டர் கொடுத்தார்.
தேசிங்கிற்கு சாடாரென ஒரு கேள்வி எழுந்து மறைந்தது. பரிமாறும்போது அந்த நபரிடம் அதை கேட்டுவிடும் முடிவொடு இருந்தான், போண்டாவோடு அந்த டேபிளுக்கு அருகில் தேசிங்கு சென்றதும் , அவர் கேட்டார்
"உங்க பேரு . . . . தேசிங்குதானே?"
"நீங்க . . . ரவிதானே.. . . "பதிலுக்கு தேசிங்கு
தேசிங்கும் ரவியும் ஐந்தாவது வரை ஒன்றாக படித்தவர்கள் ரவியின் அப்பா ஒரு கட்டிடக் கூலித் தொழிலாளி. வேறொரு ஊரில் பாலங்கட்டும் வேலைக்காக போகையில் அந்த கிராமத்தை விட்டே காலி செய்து கொண்டு போனவர்கள்தான். அதோடு இப்பொழுதான் ரவியை பார்க்கிறான்.
"என்ன ரவி? இப்போ எப்படி இருக்கிங்க? என்ன வேல பார்க்கிறீங்க?" அடக்கமான குரலில் கேட்டான் தேசிங்கு. ரவி என்று பெயர்சொல்வதற்கே ஒருமாதிரி கூச்சமாக இருந்தது அவனுக்கு.
"என்ன தேசிங்கு வாங்க போங்கன்னு . வாடா போடானே பேசலாம் நீ ""ம்ம் பரவாயில்லை இருக்கட்டும்" இந்த முறை 'ங்க'வை மட்டும் விட்டுவிட்டான்.
"நைனா ஒரு கூலித் தொழிலாளி அதான் உனக்கே தெரியுமே. . . . அவர் படற கஸ்டத்தை பார்த்து எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனுமுங்கற வெறி எனக்குள்ள வந்துடுச்சு. நைனா, அவரோட தொழில்ல என்ன இழுத்துபோட்டுக்கறதுக்கு எப்படி எப்படியோ முயற்சி பண்னார் ஆனா நான் அதுக்கெல்லாம் போகாம வைராக்கியத்தோட படிச்சு, நம்பள மாதிரி கிராமத்து மக்களுக்கு கொடுக்கிற இட ஒதுக்கீட்டுல இன்ஜினியரிங் கல்லூரியில சேர்ந்து, பட்டம் வாங்கி, இப்போ அசிஸ்டன்ட் இன்ஜினியரா இருக்கேன். காசு இல்லாம ஒரு வேளை கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்திகிட்டு இருந்த நான் இந்த நெலமைக்கு வந்திருக்கேன்னா . . . அதுக்கு படிப்பு மட்டும் தான்டா காரணம். படிப்புதான் ஏழைகளின் செல்வம் அதுமட்டும் இல்லைனா நானும் எங்க நைனா மாதிரியே சித்தாளவோ. . . மேஸ்திரியாவோ இருந்து. . . என் தலைமுறையும் வறுமையிலே போயிருக்கும் . "
'என்னடா சோறு இது?'என்று கஸ்டமர் யாரோ சோற்றை வாரி அவன் முகத்தில் அடித்தாற்போன்று உணர்வினை தேசிங்கிற்குள் பரப்பியது ரவியின் வார்த்தைகள்.
"ஆமா ரவி இந்த புத்தியில்லாமதான் நான் படிப்ப ஐஞ்சாவதோட நிறுத்திட்டு எங்க நைனாவோட இந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்துடேன் . . . இப்ப பாரு இன்னமும்.. . . நான் "அதற்கு மேல் தேசிங்கால் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
பணி முடிந்ததும் கடைசி பஸ் பிடித்து வீடுவரும்வரை நிலைகொள்ளவில்லை தேசிங்கின் மனது। ஒரு தலைமுறையின் நிலையை தலைகீழாய் புரட்டிப் போட்ட வலிமைமிகுந்த படிப்பையா நிறுத்திவிடச்சொன்னேன் ? நம் கஸ்டகாலம் நம்மோட போகட்டும் கனகசபையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும் . படிப்பறிவு இல்லாமல் படுகிற பாடு . . . நாய் பாடாத பாடு. . . அது எம் பையனுக்கும் வேணாம்' என்று தோனிற்று.வீட்டிற்குள் நுழைந்ததும் தூங்கிகொண்டிருந்த கனகசபையை எழுப்பி, 'ஐ யா ..... இந்தா நீ கேட்ட பொஸ்தக காசு . .. . நீ போய் படிய்யா. . 'என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை கோதிவிட்டான்.
விடிந்தது . வழக்கம் போல தேசிங்கு வேலைக்கு புறப்பட்டான். "நைனா. . . நீ . கொடுத்த காசு நெசமாவே பொஸ்தகம் வாங்கத்தானா? "கனகசபை கேட்டான்.
"ஆமாங்கண்ணு"தெளிவும் நம்பிக்கையும் இன்று தேசிங்கிற்குள் புதிதாய் துளிர்விட்டிருந்தது எப்படியோ ஒரு தலைமுறையை அறியாமை இருட்டில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்தது. - புதுவைப்பிரபா-No comments:

Post a Comment