Tuesday, November 1, 2011

திமிறி எழு! - சிறுகதை


அந்த குக்கிராமத்தின் குடிசை வீட்டிலிருந்து வந்த அந்த முணகலைத் தொடர்ந்து-
“யப்பா. . . . .யம்மா. . . . .” சித்ரா எழுந்திருக்க முயற்சி செய்து முடியாமல் படுத்துக்கொண்டாள். தோள்பட்டையில் பலத்த வலி. நடு முதுகில்கூட அதே அளவிற்கு வலியை உணர முடிந்தது, அவளால். இடது கைவிரல்களால் முன் நெற்றியை தடவிப்பார்த்தபோது, இரண்டு இடங்களில் வீங்கியிருந்தது.
“படுபாவி! ஒருநாளப்போல. . . . . சம்பாத்யத்த எல்லாம் குடிச்சு குடிச்சி அழிக்கிறதுமில்லாம, ஈவு இரக்கமே இல்லாம அடிச்சு பாடா படுத்துறானே. . . . . இவன் நல்ல கதிக்கு போவானா?” சித்ராவால் இந்த வாக்கியத்தை நான்கைந்து இடங்களில் நிறுத்தி நிறுத்தித்தான் சொல்ல முடிந்தது.
சித்ரா- பத்தாம் வகுப்பு வரை படித்தவள். வறுமையின் பற்களில் அவளது வாழ்க்கை சிக்கிக்கொண்ட காராணத்தினால், மேற்கொண்டு படிக்க முடியாமல் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். பக்கத்து கிராமத்திலிருந்த தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கி, இன்று பணிபுரிந்துகொண்டிருக்கும் மிக்சர் கம்பெனி வரையிலான பணிக்கு இடையில் எத்தனை வித வேலைகளை அவள் செய்து நற்பேர் பெற்றிருக்கிறாள். படுதிறமைசாலி என்று மற்றவர்கள் அவளைப் புகழ்ந்தாலும், கணவன் கணேசனுக்கு மட்டும் அவள் 'தெண்டத்தீவிட்டி' தான்.
ஒரு வழியாக சிரமத்தோடு எழுந்து அமர்ந்த நொடியில் - “ சித்தி. . . சித்தி. . . என்ன சித்தி மணி ஏழாயிட்டது, இப்போதுதான் எழுந்திருக்கீங்க? கம்பெனிக்கு போகலியா? “ சித்ராவின் அக்கா மகள் சங்கீதா, குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“ம்கூம் , போவனும்தாம்புள்ள. ராத்திரி இந்த மனுசன் நடத்துன கூத்து. உடம்பெல்லாம் ஒரே வலி. எழுந்திருக்கவே முடியல. நீ காலேஜுக்கு கிளம்பிட்டியாபுள்ள?” நடுநடுவே முணகலோடு பேசினாள்.
“ஐயையோ! சித்தி! இப்படி வீங்கியிருக்குது. . .. .ம்ம்ச்ச்” நெற்றியை தடவிப்பார்த்து “உச்ச்ச்” கொட்டிவிட்டு, இப்போ எங்க அவரு” என்றாள் ஆவேசமாக.
“விடியுதோ விடியலையோ, தெளிஞ்சதும் எழுந்துபோயிடவேண்டியதுதான் அவரோட வேலை. இப்போ எங்க இருப்பாரு அவரு?”
“சித்தி! நான் எத்தனையோ தடவ சொல்லிட்டேன். நீங்க கேட்கவே மாட்றீங்க உங்க அவஸ்தைக்கெல்லாம் காரணம், நீங்க கொடுக்குற எடந்தான். கொஞ்சமாவது எதிர்த்து பேசுங்க. மாடா ஒழப்பெடுத்துட்டு, அடி ஒத படறதுக்கு நீங்க என்ன அவரு வளர்க்கிற நாயா?
“ஏ.. புள்ள . . . . இன்னாதான் இருந்தாலும் ஆம்பளையாச்சே! நாம பொம்பள. அடங்கிதான் போவணும். விடு ! என்னைக்காவது அந்த ஆளுக்கு நல்லபுத்தி வராமலா போயிடும்.”
“ இதான். இப்படித்தான்,மத்தமத்த பொம்பளைங்கப்போலவே புருசன், புருசன். . ஆம்பள, ஆம்பளன்னே பேசி, கெட்டு குட்டிச்சுவரா நிக்கறீங்க. நான் கேக்கறேன். . . அடிக்கறதுக்கும் அடிவாங்கறதுக்கும் ஆம்பள இன்னா? பொம்பள இன்னா? நீயும் சம்பாரிக்கற, அவரும் சம்பாரிக்கறாரு. நீயாவது நாலுகாசு சேர்த்துவச்சு, இந்த ரெண்டு வருசத்துல, சாமான் சட்டின்னு வாங்கிப்போட்டிருக்கிற. அவரு இன்னாடான்னா. . . எல்லாத்தையும் குடிச்சி குடிச்சி அழிச்சிட்டாரு. முறைப்படிபார்த்தா, நீதான் அவர அடிச்சி திருத்தி ஒழுங்குபடுத்தணும்”
“ஐயையோ! என்னபுள்ள. . .என்னென்னமோ பேசற!. சரி விடு. நீ வந்த விசயத்த சொல்லு!”
“ என் விசயம் இருக்கட்டும். தோ பாரு சித்தி! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசங்கிற காலம்லாம் மலையேறிடுச்சு. இப்போலாம், கல்லுன்னா கல்லுதான். புல்லுன்னா புல்லுதான். புருசன்னா மட்டும்தான் புருசன். எனக்கு மட்டும் இதுமாதிரி ஒருத்தன் வாய்ச்சான்னு வச்சிக்கோயேன். . .போலீசுல புடிச்சுகுடுத்து, முட்டிக்கு முட்டி தட்ட வச்சிடுவேன். சரி. ஊங்கிட்ட சொல்லறதும், அதோ அங்க கெடக்குதே அந்த அம்மிக்கல்லு அதுகிட்ட சொல்றதும் ஒன்னுதான். நான் கௌம்பறேன். எட்டுமணி பஸ்ஸ உட்டா, டவுனுக்கு போயி சேர்றதுக்குள்ள எங்கத கந்தலாயிடும். சாந்துப்பொட்டு எடுக்கத்தான் வந்தேன். எடுத்துக்கறேன் சித்தி. நீ ஒடம்புக்கு வெந்நீர் வச்சி ஊத்து”
அக்கா மகள் என்றாலும், வயது வித்தியாசம் என்னவோ ஆறு ஏழுதான் இருக்கும் இவ்விருவருக்கும். சங்கீதா, சித்ராவின் முதன்மைத்தோழி. சங்கீதா போன பின்னும், அவள் உதிர்த்துவிட்டுப்போன வாக்கியங்கள் அந்த வீட்டின் மண்சுவற்றில் பட்டுபட்டு எதிரொலிப்பதுபோலவே இருந்தது, சித்ராவிற்கு.
அன்று இரவும் கச்சேரியைத் தொடங்கினான், கணேசன்.
“ஏய். . . . சித். . . .ரா. .. . இங்க வாடி” அவள் பின்னந்தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்தான்.
“யோவ்! நேத்து சாப்பாட்ல உப்புஇல்ல, காரமில்லன்னு அடிச்ச. இன்னிக்கு என்னய்யா பிரச்சன?” பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள்.
“ காலையி;ல ஆறுமணிக்குமேல ஒரு பொம்பளைக்கு என்ன தூக்கம் வேண்டிகெடக்குது. . . . நா. . . போறவரைக்கும் நீ எழுந்திருக்கல. .யில்ல? .” நா குழறிப்பேசினான்.
“தோ பாரு! சும்மா கண்டதுக்கொல்லாம் அடிக்கிற வேல வச்சுக்காத. நிறுத்திக்கோ இல்லன்னா. . . .” அவள் முடிப்பதற்குள்-
“இன்னாடி பண்ணுவ? என்ன அடிக்கப்போறீயா? அடி இந்தா அடி. . . . “நெஞ்சை நிமிர்த்திக்காட்டிக்கொண்டுபோய் அவளை நெட்டித்தள்ளினான். அவள் வழக்கம்போல் குப்புறப்படுத்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.
பீடி பற்ற வைத்துக்கொண்டே, "மெரட்டுறீயா? இரு நாளைக்கு, கூட கொஞ்சம் ஊத்திக்கினுவந்து. . . சங்சகறுத்துடறேன்” என்றான்.
விடிந்தது-
வாசல்தெளிக்கவந்த சித்ரா, சங்கீதாவை அழைத்து, அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். முகமலர்ச்சியுடன் இரண்டடி நகர்ந்துபோன சங்கீதா திரும்பவந்து, சித்ராவின் கன்னத்தைகிள்ளி முத்தமிட்டுவிட்டுச் சென்றாள்.
மாலை-
அந்த குக்கிராமத்தின் அனேகம் பேருக்கும் அதிர்ச்சியில் முகம் இறுகிப் போயிருந்தது. கற்பனையிலும் நினைத்திராத காட்சி அவர்கள் கண்முன்.காவல்துறை வண்டியில் கணேசனை குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டார்கள்;, காவலர் இருவர்.
“நான் இன்னா பண்ணேன். என்னை ஏன் புடிச்சுட்டுப்போறீங்க?” முரண்டுபிடித்த அவனிடம், “ஆங். . . தெனமும் பொண்டாடிய குடிச்சிட்டு வந்து அடிச்சு சித்ரவத படுத்தின இல்ல. . .. அவங்க மகளீர் காவல் நிலையத்துல உம்பேர்ல புகார் குடுத்திருக்காங்க . . . விசாரணைக்கு ஏட்டம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க. தொரைக்கு வெளக்கம் போதுமா இன்னும் வேணுமா?” காவலர் ஒருவர் சொன்னார். கணேசன் சித்ராவை முரைத்து பார்த்தான். தன் தோள் மீது கைப்போட்டு நின்றிருந்த சங்கீதாவை விட்டு சற்று விலகி நின்று, “ இன்னாய்யா மொறைக்கிற? ஒழுங்கா, புருசனா லட்சணமா எங்கூட குடித்தனம் நடத்தியிருந்தா நான் ஏன்யா அங்கலாம் போறேன். பொம்பளங்கிறவ எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு பொத்திக்கிட்டே போவணும்ங்கிற அவசியம் கெடையாது. யோவ். . . இப்பமட்டும் எதுவும் கெட்டுப்போவலைய்யா. நீ திருந்தி. . . என்னை மனைவியாக்கூட வேணாம், ஒரு மனுசியாவாவது மதிச்சி குடும்பம் நடத்துற எண்ணமிருந்தா ஏட்டம்மாக்கிட்ட சத்தியம் பண்ணிக்குடுத்துட்டு வா! இல்லன்னா. . . போயிக்கிட்டே இரு” என்றாள்.
வண்டி நகர்ந்ததும் ஆண்களும் பெண்களுமாய் கூடியிருந்த கூட்டம் கலைந்தது. ஆதில் ஆண்கள் பலர், இனி அந்த குக்கிராமத்திற்குள், இந்த காவல்துறை வண்டி அடிக்கடி வரவாய்ப்பிருப்பதாக கருதினர். பெண்களில் பலர், முன்பைவிட சற்று நெஞ்சை நிமிர்த்தி நடந்தனர்.
புதுவைப் பிரபா

No comments:

Post a Comment