Tuesday, November 1, 2011

அந்நியன் - சிறுகதை

பெங்களுர், கலாசி பாளையத்தின் திப்பு சுல்தான் அரண்மனைச் சாலை, அதிகாலையிலேயே பரபரப்பாகிவிடும் . காரணம், அந்தச் சாலையில்தான் பெரும்பாலான தனியார் பேருந்து இயக்கும் அலுவலகங்கள் இருந்தன. அங்கு, மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் வந்து சேரும் பேருந்துகள் அதிகம். அவ்வேளையில், அந்தச் சாலையே பேருந்து நிலையம் போல் காட்சியளிக்கும்। இதன் பொருட்டுதான், தர்மசிவம் இங்கு இடம்பிடித்து, பெட்டிக்கடை வைத்துக் கொண்டார்.


கடலூர் மாவட்டத்தின் நெல்லிக்குப்பம் கிராமம் இவரது பூர்வீகம்.கடந்த ஏழு வருட பெங்களுர் வாசத்தால், கன்னட மொழியும் வசப்பட்டிருந்தது. கன்னடமென்ன பாதி தமிழ்தானே!பயண களைப்பு முகம் முழுக்க பரவிகிடந்த ஒருவர், தர்மசிவத்தின் கடையில் பொருள் வாங்க நின்றிருந்தவரிடம், ‘மும்பைக்கு இங்கிருந்து எந்த பஸ்ல போகலாம்?’ என்று ஆங்கிலத்தில் கேட்க, அந்த நபர் திருதிருவென விழித்தார்। ‘மும்பைக்கு போகணுமா? தோ…எதிர்த்தாப்பல இருக்கிற டிராவல்ஸ்க்கு போங்க। இன்னும் ஒரு மணி நேரத்துல ஏ।சி। வோல்வோ பஸ் இருக்குதுன்னு நினைக்கிறேன்” தர்மசிவம் வலிய மூக்கை நுழைத்து உதவினார். காரணம், அந்த ஆசாமியின் கையிலிருந்த ‘பாரதியார் கவிதைகள்’ காட்டிக்கொடுத்தது.இன்னும் சிலவற்றை தர்மசிவத்திடம் விசாரித்துக்கொண்டு அந்த நபர் நகர்ந்தபோது, ‘என்ன? உங்க ஊர்க்காரரா?’ என்று நக்கலாய் கன்னடத்தில் கேட்டான், சந்திரண்ணா.

சந்திரண்ணாவைப் பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும். முப்பது வயது இளைஞன். நிரந்தரமான வேலை ஏதுமில்லாமல், வாரத்திற்கு ஒரு கடை: ஒருவிதமான வேலை என்று மாற்றிக்கொண்டே போவது அவனது வழக்கம். ஆனாலும், அவன் செய்யும் உருப்படியான ஒரே வேலை, அதிகாலை வேளையில், அந்த தெருவில் வந்திறங்கும் பயணிகளை கவர்ந்து, அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை கை காட்டிவிட்டு, கமிஷன் பெற்றுக்கொள்வதுதான். இவற்றையெல்லாம் விட, அவனுக்கு பிடித்த வேலை, வம்பு வளர்ப்பது.

ஒரு இளஞ்சோடி தர்மசிவத்தின் கடையில் வந்து நின்றது. அவன் செல்போனில் பேசியப்படி காலிடுக்கில் பெட்டியை திணித்துக்கொள்ள, அந்தப் பெண் இரண்டு கைகளையும் குறுக்கலாக்கிக் கட்டிக்கொண்டு நின்றாள். பெங்களுரின் அதிகாலை மென்குளிர் அனேகம்பேரை அப்படித்தான் நிற்க வைக்கும். ஒரு சில வினாடிகளில் செல்போனை துண்டித்துவிட்டு, தர்மசிவத்திடம் தண்ணீர் பாட்டில் கேட்டான். அப்படியே ‘இங்க…. பக்கத்துல ரூம் ஏதாவது கிடைக்குமா?’ என்று மலையாளம் கலந்த நெடியோடு விசாரித்தான்.“சந்திரா…” தர்மசிவம் குரல்கொடுத்தார். சந்திரண்ணா அவர்களை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

சந்திரண்ணாவிற்கு இயன்றவரை உதவுவார், தர்மசிவம். வேலை விஷயத்தில் கூட அவனுக்காக அவர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவன் அதையெல்லாம் வீணடித்துவிட்டு விதண்டாவாதம் பேசித்திரிந்தான்.அன்றும் வழக்கம்போல மூன்று மணிக்கெல்லாம் கடையை திறந்தார் தர்மசிவம். பேருந்துகளின் வருகை குறைவாக இருக்கக் கண்டதும் சந்தேகித்து, பக்கத்தில் விசாரித்தார்.‘ஒகேனக்கல் பிரச்சனையால, தமிழக பேருந்துகள் எல்லாம் ஓசூர்லேயே நிறுத்திட்டாங்க. எங்கப் பார்த்தாலும் ஒரே பிரச்சனையா இருக்குது. நீயும் பேசாம கடையை மூடிட்டு போயிடு’ – காரணத்தோடு அறிவுரையும் வந்தது.கர்நாடகாவில் உள்ள ஆறுகோடி பேரில், எழுவது லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். 29 மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருந்த போதிலும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், ஒட்டு மொத்த தமிழர்களும் இன்னலுக்கு ஆட்படுவது இயல்பு.கடையை மூடிவிட்டுபோய்விடலாம் என்று முடிவெடுத்து முடிக்கும் நொடியில், நான்கைந்துபேர் ஒன்றாய் கூச்சலிட்டபடியே ஓடிவந்து தர்மசிவத்திடம் தகராறு செய்தனர். அந்தக் கூட்டத்தில் சந்திரண்ணாவும் இருந்தான். பேசிக் கொண்டிருந்த போதே ஒருவன் தர்மசிவத்தை நெட்டித் தள்ளினான். அவர் விழுந்து எழுந்து வருவதற்குள் கடையை அடித்து நொறுக்கினார் இருவர். சந்திரண்ணாவும் முழக்கமிட்டபடி ஒன்றிரண்டு பாட்டில்களைத் தூக்கிப்போட்டான்.தர்மசிவத்திற்கு சந்திரண்ணாவின் செய்கை அதிர்ச்சி தரவில்லை. ஏனெனில், அவனது கண்மூடித்தனமான இனவெறி அவருக்குத் தெரியும்.அந்தக் கூட்டம் அங்கிருந்து ஓடத்தொடங்கியபோது சந்திரண்ணாவும் கண்டுக்கொள்ளாமல் ஓடினான். இரண்டொரு அடியில் ஏதோ தடுத்தி கீழே விழுந்த சந்திரண்ணாவின் பின் மண்டையை சாலையோரம் கிடந்த சிமெண்ட் சிலாப் கிழித்தது. இரத்தம் கொடகொடவென கொட்டியது. கீழே விழுந்துவிட்ட இவனை கண்டுகொள்ளாமல், கூச்சலிட்டுக் கொண்டே அந்தக் கூட்டம் வேறொரு கடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அதிலும், தூரத்தில் போய் திரும்பி பார்த்த ஒருவன், சந்திரண்ணாவை செய்கை காட்டி ‘வா! வா!’ என்று அழைத்துக் கொண்டிருந்தான்.தர்மசிவம் ஓடிப்போய் சந்திரண்ணாவை தூக்கிக் கொண்டார். அருகாமையில் இருந்த இன்னொருவரின் உதவியோடு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டுபோய், அந்த தெரு முனையில் இருந்த பெங்களுர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த பொழுது முழு மயக்கத்திலிருந்தான் சந்திரண்ணா.

காலை ஆறு மணி. செய்தி அறிந்து மருத்துவமனைக்கு வந்த தர்மசிவத்தின் மகன் முகிலன், அந்த காட்சியைப்பார்த்து அதிர்ச்சியுற்று நின்றான். தர்மசிவம், சந்திரண்ணாவுக்காக இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.“அப்பா… என்னப்பா இதெல்லாம்? இவனும்தான் உங்கள அடிக்க வந்தானாமே… மனசாட்சியே இல்லாம நம்ம கடைய உடைச்சியிருக்கிறான். இந்த நன்றிக் கெட்ட நாயிக்குப்போய்… ச்சே!” முகிலன் நெற்றியை பிடித்துக் கொண்டான்.“முகிலா… அப்படியெல்லாம் பேசாத. நல்ல பலமான அடி. அதிக இரத்தபோக்கு. உடனே இரத்தம் ஏத்தனுமுன்னாங்க. பி. பாஸிட்டிவ் குருப் இன்னாங்க. நானே குடுத்திட்டேன். எனக்குள்ளும் அவனுக்குள்ளும் ஓடுறது ஒரே இரத்தம்ன்னு கண் விழிச்ச பின்னே அவன் புரிஞ்சுகிட்டா சரி.ஏதோ பேச வந்த முகிலனை, பேசவிடாமல் தடுத்து தர்மசிவமே தொடர்ந்தார்.“டேய் முகிலா… தமிழர்களோட இரத்தம் கர்நாடகாவுல ஓடணும்ன்னு அவன் நினைக்கிறான். கன்னடனுக்குள்ளேயும் தமிழன் இரத்தம் ஓடட்டுமேன்னு நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். விடு, இதுக்குப்போய்….”கண்மூடிக்கிடந்த நிலையிலும், நீர்த்திவலைகள் கன்னங்களில் கோடுகிழித்தபடி உருண்டுக் கொண்டிருக்க, சந்திரண்ணா ஏதோ முனகினான்.“முகிலா… அவன், “யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னு’ சொல்றாப்பல இல்ல” தர்மசிவம் கேட்டார்.

-புதுவைப்பிரபா-

No comments:

Post a Comment