Tuesday, November 1, 2011

கனவு மெய்ப்படும் - சிறுகதை

மக்களின் பூர்வாங்க நீர்த்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏக்கத்தோடு சுழன்று கொண்டிருந்த உலக உருண்டையில் தான் இந்த கொடாத்தூர் கிராமமும் இருந்தது. இந்த கிராமத்தின் பெரும்பகுதி நிலங்கள் புல்பூண்டு கூட முளைக்க வக்கற்று வறண்டு கிடந்தது. தலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சனை விவசாயிகளை வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்ள செய்தது. அதை கூட சமாளித்து விடலாம் என்று துணிந்தவர்களால், குடிநீருக்காக தினமும் மைல்கணக்கில் நடப்பதை சமாளிக்க முடியவில்லை. நீர் தேடி அலையும் வாழ்க்கை அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவு நகரம் நோக்கி நகர அவர்கள் எடுத்த முடிவு.

“வரதராசு . . . அடுத்த மாசம் நான் இந்த கிராமத்த காலி பண்ணிகிட்டு, டவுன் பக்கம் போயிடலாமுன்னு இருக்கேன். நியாமான வாடகைக்கு வீடு ஏதாவது கிடைச்சா சொல்லேன்”. சுப்பிராயனின் வார்த்தைகளில் கவலை தேங்கி கிடந்தது.

“ சுப்பண்ணே. . . இப்போ எதுக்கு நீங்க டவுனுக்கு போறீய”

“ பாழாப்போன இந்த வானம் காய்ஞ்சு, ஊரத்தான் பொட்டல்காடா மாத்திடுச்சுன்னு பார்த்தா. . . குடிக்கிற தண்ணிக்கும் நாதியத்து போயி நம்மல நாந்;துகிட்டு சாவச்சொல்லுதுப்பா. கோடை ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைன்னா இன்னும் போகப்போக. . . . . நம்மால ஆகாதுப்பா”

“அண்ணே டவுன்ல மட்டும் பஞ்சமா நதிகள் பாய்த்து ஓடுதாக்கும். . . அங்கியும் இதேதான்.”

“நான் இல்லேன்னு சொல்லல. ஆனா . . . காசு கொடுத்தாவது அங்க தண்ணிய வாங்கிபுடலாம். பாலுக்கும் தயிருக்கும் செலவழிக்கிற சில்லறைய தண்ணிக்குனு போட்டுட வேண்டியதுதான். ம்ம். நம்ம நிலைமைய பார்த்தியா?”.

“என்னண்ணே நெலம பொல்லாத நெலம? நாம இப்போ தண்ணிக்கு சிங்கி அடிச்சிகிட்டு இருக்கிறதுக்கு யாரு காரணம் தெரியுமா? நமக்கு முந்தைய தலைமுறை. அவங்கதான் பொறுபத்து அக்கடான்னு பொழப்பபார்த்துகிட்டு போயிட்டாங்கன்னு பார்த்தா . . . இப்போ நீங்களும் கிளம்புறீங்க. போங்க ஊரவிட்டே போங்க . . . நீங்கமட்டும் ஏன் போறீங்க. எல்லோரையும் காலிபண்ணி கூட்டிட்டு போங்க, இந்த ஊரு நாசாமாபோகட்டும்.” வரதராசுவின் வார்த்தைகளில் கோவம் கொப்பளித்தது.

வரதராசு.அந்த கிராமத்திலேயே கல்லூரிவரைக்கும் சென்று படித்தவன் அவன் ஒருவன்தான். மற்றவர்கள்போல பட்டம் பெறும் நோக்கத்திற்காகவோ பதவியை அடையும் ஆசையின் பொருட்டோ அவன் படிக்கவில்லை. தன் பகுத்தறிவினை பக்குவப்படுத்திக்கொள்வதற்காகவும்,படித்ததனை ஊரின் நலனுக்காக நடைமுறைபடுத்துவதற்காகவுமே அவன் அதிக அக்கறையோடு படித்தான். அவனது ஊர், அவனது உயிர்.

சுப்புராயனுக்கு என்னவோபோலாயிற்று.

“ வரதராசு. . . நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ நீ இப்படி கோவிக்கிற?”.

“ பின்ன என்னண்ணெ. கரிகாலன் காலத்திலேயே வெள்ளப்பெருக்கை கட்டுபடுத்த கல்லனை கட்டி அந்த நீரை காவிரிப்படுகையில் திருப்பிவிட்டு, அதை பாசன வசதிக்கு பயன்படுத்தியிருக்காங்க நம்ம தமிழங்க. அதற்கு பிறகு வந்த மன்னர்களும் வறட்சியான பகுதிகள்ல ஏரிகளை அமைச்சு பாசன வசதிகள ஏற்படுத்தியிருந்திருக்கிறாங்க. அப்போ தமிழ் நாட்டுல இருந்த ஏரிங்க எவ்வளோ தெரியுமா? முப்பத்தெட்டாயிரம். அது அத்தனையும் நமக்கு முந்தனவங்க பராமரிச்சு வந்திருந்தா. . . இப்போ தண்ணி பிரச்சனையே வந்திருக்காது .

“ஐயோ. . . ! “ சுப்புராயனுக்கு ஆச்சரியம் .

“நீங்க ஆச்சரியபடுறமாதிரி இன்னொரு விஉயம் சொல்லவா?” வரதராசு தன் தலைப்பாகயை கழற்றிக்கொண்டே கேட்டான்.

“ம்ம்”

“ நம்ம ஊரிலேயே ஒரு ஏரியும், ஒரு குளமும் இருக்குது தெரியுமா?”

“ சும்மா ஒளராத ராசு. நான் பொறந்துவளர்ந்ததெல்லாம்; இந்த ஊருலதான். ஏனக்கு தெரியாம ஒரு ஏரியாவது குளமாவது.”

“ ஆமாண்ணே. குப்புசாமி வீட்டுக்கு பின்புறம் ஏக்கர் கணக்குல கரம்பா கிடக்குதே நிலம் , அது ஏரிண்ணே. அரசமரத்து புள்ளையார் கோயில ஒட்டி குப்பைமேடா கெடக்குதே அதுதான் ~பாலக்குளம் | “.

நம்பிக்கையில்லாமல் பார்த்த சுப்புராயனுக்கு மேலும் விளக்கம் தரப்பட்டது.

“பிரிட்டிஉ; ஆட்சி வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ஏரிகுளங்களை பராமரிக்கிற வேலை கிராம சமுதாயத்தின்; பொறுப்பில் இருந்தது. அதனால மக்களே அத சுலபமா பராமரிக்க முடிஞ்சது. வெள்ளக்காரன் ஆட்;சியில கூட, அவனுடைய மேற்பார்வையில மக்கள்தான் அந்த வேலைய செஞ்சிகிட்டு வந்திருக்காங்க. ஆனா . . . சுதந்திரம் கிடைச்ச பின்னாடி ~எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்| ஆயி;ட்டாங்களே, அதனால , யாரும் கீழ்மட்டத்திற்கு எறங்கி வேலை செய்ய முன்வரல. அதன் பலன். . . மேல்நிலை நீர் தேக்கங்கள் எல்லாம் பராமரிப்பு இல்லாம பாழடைஞ்சு போச்சு. . . “

“அது சரி நம்ம பண்றது இருக்கட்டும். மழை இப்போதெல்லாம் சரிவர பெய்யரதேயில்லையே. அப்புறம் ஏரி குளம் வெட்டி என்ன புரையோஜனம்?” தன் அறிவுக்கு எட்டியதை வெளிபடு;;த்தினார்,சுப்புராயன்.

“ இப்படித்தான் உங்கள போலவே எல்லோரும் இப்படியே பேசிகிட்டு இருக்காங்க. ஆனா உண்மை அது இல்ல. நம்ம மாநிலத்தோட வருடாந்திர சராசரிமழையளவு 1100 மில்லிமீட்டர். புள்ளிவிவரப்படி கடந்த பத்து வருஉமா கிட்டதட்ட இந்த அளவு மழை பெஞ்சிருக்கு. கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். ஆனா. . . நாம பெய்யற மழை தண்ணிய சேகரிச்சு வைக்காம, வீணா வாய்கால்ல வழிஞ்சு ஓடி கடல்ல கலக்க விட்டுட்டு,மழை பெய்யல மழை பெய்யலன்னு பொலம்பிட்டுகிடக்கிறோம் நான் சொல்லரபடி கேட்டு;, இந்த ஊரு மக்கள் கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா. . . . நம்ம கிராமத்தையே பச்ச பசேல்ன்னு ஆக்கிடலாம் தெரியுமா?”.

ஒரு பெரிய திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான ~தீ| யை வரதராசு பற்றவைத்தான்.

மறுநாள்.

சுப்புராயன், ஊர் முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்துகொண்டு வரதராசு வீட்டிற்கு வந்தார். குப்புசாமி, சாந்தப்பன், டேனியல் ஆகியோர் அதில் அடக்கம்.

வரதராசுவுக்கு ஆச்சரியம். எந்த பிரச்சனையாயிருந்தாலும் இந்த மனிதர்களெல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஒன்றாக கூடி பழக்கமில்லை.

சாந்தப்பன் தொடங்கினார்.

“ தம்பி… . எங்களுக்குள்ள இருக்;கிற கருத்துவேறுபாடு எல்லாத்தையும் மறந்துட்டு, உன்னை நம்பி இங்க வந்துட்;டோம். நம்ம கிராமத்து தண்ணி பிரச்சனையை தீர்க்கிற வழி உங்கிட்ட இருக்கிறதா சுப்புராயன் சொன்னாப்பல. என்ன செய்யனும்னு சொல்;லு அதன்படியே செய்துபுடலாம்.”

உச்ச சந்தோசம்; உள்ளத்தை நிரப்பி, வரதராசுவின் விழிவழியே வழியத்தொடங்கியது. தன் கிராமத்தை வளமாக்க அவன் கண்ட கனவு மெய்ப்;பட தொடங்கிவிட்டதாய் அவனால் உணரமுடிந்தது.

“ ஐயா. நான் சொல்லறத கொஞ்சம் கவனமா கேளுங்க. நம்முடைய தண்ணி பிரச்சனை தீரணுமுன்னா, முதல்ல நமக்குள்ள இருக்குற பாகுபாட்ட உடைக்கனும். அதனால ஊர் மக்கள், காலனி மக்கள்ன்னு நமக்குள்ள பிரிவுகள் ஏற்படுத்திக்காம, இந்த கிராமத்து மக்கள் , இந்த கிராமத்து பிரச்சனைக்காக போராடப்போராங்கன்னு நினைக்கத்தொடங்கனும். முதல்ல நாம செய்ய வேண்டியது சர்வேயர போய் பார்த்து நம்ம ஊர் ஏரியையும் அந்த பாலகுளத்தையும் அளந்து அதோட எல்லைய கண்டுபுடிச்சு கல்லு போடச்சொல்லனும். அந்த எல்லைக்குள்ள யாரு, குடிசைபோட்டிருந்தாலும், வைக்கப்போரு வச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு வழியில அத அனுபவிச்சிட்டு இருந்தாலும் தகறாரு பண்ணாம காலி பண்ணி கொடுத்திடனும். இதுதான் முதல் கட்டமா நாம செய்யவேண்டிய வேலை”.

குப்புசாமி தன் பிரச்சனைக்கு வந்தார்.

“தம்பி, நீங்க சொல்லறதெல்லாம் சரிதான். ஆனா. . .ஊர் ஏரின்னு நீங்க குறிப்பிடற அந்த பெரும்பகுதிய எங்க அப்பார் காலத்திலிருந்தே நாங்கதான் ஆண்டுகிட்டு வர்றோம்.அதை தீடீர்;னு மொத்தமா விட்டுகொடுக்கணும்னா.. . அதான் யோசனையா இருக்கு.”

“ ஊருக்கு பொதுவான இடத்த இத்தனை காலம் ஆண்டு அனுபவிச்சதே தப்பு. பிரச்சனைன்னு வந்துட்ட பிறகும் விட்டுகொடுக்க மாட்டேங்கறது அடாவடித்தனம்தானே “ டேனியல் சற்று கடுகடுப்புடன் சொன்னதை கேட்ட வரதராசுவிற்குள் ~ஐயோ! காரியம் கெட்டுவிடுமோ| என்ற பயம் தோன்றி மறைந்தது. நிலமையை சரிபடுத்த அவனே பேசினான்.

“ அண்ணே. . . நாம இப்போ பேசிகிட்டு இருக்கிறது ஒட்டு மொத்த ஊர் மக்களோட உயிர் சம்மந்தப்பட்ட விஉயம். எல்லோரும் நல்லாயிருக்கணுங்கிறதுக்காக நாம வரையறுக்கிற இந்த திட்டத்துல நமக்கு சொந்தமான சொத்துபத்தையே நாம இழக்க தயாராயிடணும். அப்படி இருக்கிற பட்சத்துல அரசாங்க நிலத்தை விட்டுகொடுக்க மாட்டேன்னு அடம்புடிக்கிறது அவ்வளவா நல்லாயில்லை.”

பேச்சுவார்த்தையில் காலம் செலவாகிக்கொண்டிருந்தது. ஆனால் முடிவில் ஊருக்கு நல்ல காலம் உதயமானது. ஆம். குப்புசாமி சம்மதித்திருந்தார். அவரே இறங்கிவந்துவிட்ட பிறகு இனி ஒரு தடையும் இருக்கப்போவதில்லை என்று அனைவரும் திண்ணமாய் நம்பினர்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. ஏரி,குளத்தின் எல்லைகள் கண்டறியும் பணி நடந்துகொண்டிருந்தது. வரதராசு தான் கண்ட கனவு மெய்ப்படப்போவதை எண்ணி எண்ணி சரிவர தூங்காமலிருந்தான். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதன்-காலம் அதிசயப்பட்டது.

தலையை கவிழ்த்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த வரதராசுவை பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள்.

“ இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கூனிகுறுகி உட்கார்ந்துட்டே. . .” பத்துபேர் கூட்டத்திலிருந்து வந்தது சுப்புராயனின் குரல்.

“ பின்ன என்னண்ணே. . . அந்த ஏரியையும் குளத்தையும் தூர்வார்றதுக்காக உங்ககிட்டலாம் கையெழுத்து வாங்கின அந்த லெட்டர, அதிகாரிகிட்ட கொண்டுபோய் கொடுத்ததுக்கு, இப்போதைக்கு அத தூர்வார முடியாது, அடுத்த வருஉம் வேணுமுன்னா பார்க்கலாமுன்னிட்டார்.” வரதராசுவின் மனச்சோர்வு வார்த்தைகளில் தெரிந்தது.

“ அண்ணே. . . நாங்கலாம் இருக்கோம்ண்ணே. வாங்கண்ணே ஊர் மக்க எல்லாம் ஒன்னா போயி அந்த ஆபிசர உண்டா இல்லையான்னு பார்த்துடலாம்.” துடிப்புடன் ஒரு இளைஞன் பேசினான்.

“ ம்ம்ச்ச். ஆத்திரப்படக்கூடாது. ஆரசாங்கத்து பக்கமும் நியாயம் இருக்கு. மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் ஏரிகுளங்கள புனரமைக்க , ஒரு குறிப்பிட்ட தொகைய ஒதுக்கி, அசராம வேலை பார்த்துகிட்டுதான் இருக்காங்க. அவுங்க, எந்தெந்த கிராமத்துல எந்தெந்த ஏரிகுளங்கள முதல்ல வெட்டறதுன்னு ஒரு திட்டம் வரையறுத்து அதன்படிதான் செயல்படறாங்க. அவங்கள குத்தம் சொல்லி ஒன்னுமில்ல. நம்ம கிராமத்துல அந்த வேலைய உடனே தொடங்கணுங்கிறது என்னோட ஆசை. அது தற்சமயம் முடியாதுங்கிறது அவங்களோட முடிவு.”

வரதராசுவின் பதிலில் நியாயம் இருப்பதை உணர்ந்தவர்கள் அமைதியானார்கள். ஆனால் சுப்புராயன் மட்டும்; யோசித்து ஒரு கேள்வி கேட்டார்.

“ ராசு. . . வேற வழியே இல்லையா ? “

“இருக்குதுண்ணே. எல்லோரும், எல்லாத்துக்கும், எல்லாவேளையிலும் அரசாங்கத்தையே நம்பிகிட்டு இருக்கிறது முட்டாள்தனம். அரசாங்கத்துகிட்ட இருக்கிற பலத்தவிட, பலமடங்கு பலம் நம்மகிட்டயே இருக்கு. ஆனா,அதை நாம ஒழுங்கா பயன்படுத்தறதில்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ~நாங்கலாம் இருக்கோம்|ன்னு இந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டுச்சு பாருங்க,அந்த குரலுக்கு உயிர் கொடுத்து அதை உண்மையாக்கணும். கிராமத்துல இருக்கிற ஒவ்வொரு வீட்டிலேர்ந்தும் யாராவது ஒருத்தரு முன்வந்து அந்த ஏரியையும் குளத்தையும் தூர்வார ஏதாவது ஒரு வகையில உதவணும். முட்பொதர்கள அழிக்கிறது, மண்வெட்டறது, அதை கொண்டுபோய் கொட்டி கரை அமைக்கிறது, இந்த மாதிரி வேல செய்ரவங்களுக்கு டீ காப்பி போட்டு கொண்டாந்து கொடுக்கிறது, சாப்பாடு போடறது, இல்லேன்னா முடிஞ்சளவு பண உதவி செய்யரதுன்னு.....ஏதாவது ஒரு வகையில உதவறதுக்கு , இந்த கிராமமே ஒன்னுகூடி வந்ததுன்னா… வர்ற மழைக்குள்ள இந்த வேலைகள முடிச்சு, அடுத்த வருஉம் தண்ணி பிரச்சனையே இல்லாம இருக்கலாம்.”

“ அவ்வளவுதானேண்ணே. .கவலையவிடுங்க. இளைஞர்கள் நாங்க இருக்கோம். இப்பவே வீடுவீடா போறோம்: விஉயத்தை சொல்றோம்:ஆள் சேர்க்கிறோம்:இரண்டொரு நாள்ல வேலைய தொடங்கறோம்.” இந்த வாலிபர்களின் வார்த்தைகள் வரதராசுவுக்குள் துவண்டு கிடந்த நம்பிக்கையை தூக்கிநிறுத்தியது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ~கனவு மெய்ப்படும்| அவன் மனதில் தோன்றியது.

சூரியன் கோடையை சூடேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் யாவரும் நீர்நிலைகளின் புனரமைப்பு வேலையில் சூடேறியிருந்தார்கள். சாதி, வயது, வசதி, பாலினபேதமின்றி அனைவரும் களமிறங்கி வேலை செய்தார்கள். தங்கள் கிராமத்திற்கு ஏரி குளம் வேண்டு;மென்ற தாகம், அவைகளை அமைத்துமுடிக்கும்வரை அவர்களிடம் தீரவில்லை.

பிரமாண்டமாய் தெரிந்தது,ஏரி. பிரமிக்கவைத்தது,குளம். பார்க்க பார்க்க எல்லோரின் நெஞ்சிலும் ஆனந்தம் தாண்டவமாடியது. இனம் கண்டு கொள்ள முடியாத உணர்வுகள் , அத்தனைபேரின் இதயங்களிலும் பரவியது. வெளிப்படுத்த முடியாத வகையில் உள்ளத்து நிகழ்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும். ஊருக்கு அழகு கூடியது. ஊர் மக்களுக்கும் அழகு கூடியது.

வரதராசு இன்னும் ஓய்ந்துவிடவில்லை.

“ ஏரிக்கும் பாலக்குளத்துக்கும் நீர்வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால் சரிசெய்யணும். ஏதிர்காலத்துல இந்த ஏரியையும் குளத்தையும் ஆக்கிரமிப்புல இருந்து காப்பாத்தறதுக்காக கரைய சுத்தி பனங்கன்னு நடணும். . .” இன்னும் சில வேலைகள் சொன்னான்.

வேலைகள் யாவும் முடிந்தது. கொடாத்தூர்; கிராமம் விடிந்தது.

மழை! மழை! மழை!

மழைநீர் ஏரியையும் குளத்தையும் நிரப்பிக்கொண்டிருக்க, மக்களின் மனம் சந்தோஉத்தால் நிரம்பிக்கொண்டிருந்தது. சொட்டு தண்ணீருக்காக தவம் கிடந்த பூமியில் , வயிற்றை நிரப்பிக்கொண்டு , ஏரியும் - குளமும்.

ஊர் மக்கள் வரதராசுவை கொண்டாடினார்கள். வரதராசு தன்னடக்கத்தோடு பேசினான்.


“ தோ. . .பாருங்க. . .என்னை யாரும் பாராட்ட வேண்டாம். ஏன்னா. . இந்த வேலையில ஒவ்வொருத்தரோட உழைப்பும், வேர்வையும் ரத்தமும் இருக்கு. ஒட்டுமொத்த கிராமத்தோட ஒத்துமையே , இவ்வளோ பெரிய சாதனைய சாதரணமா படைக்கிறதுக்கு காரணம். இதையெல்லாம் அமைச்சு முடிக்கிறதோட நம்ம கடமை முடிஞ்சிடல. அதை பத்திரமா பராமரிக்கணும். பாதுகாக்கணும். விவசாயத்த திரும்ப தொடங்கிடுவோம். ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணி, ஏரியில குறையர வரைக்கும் ஏரிப்பாசனம் செய்வோம்;.அதுக்குள்ள ஏரித்தண்ணி ஊறி மேல் ஊத்து எறைக்க ஆரம்பிச்சிடும். தயவு செய்து அதிக தண்ணி தேவைபடுற நெல்லை நடாம, தோட்டப்பயிரு, பழவகைச்செடிகள்,மூலிகை செடின்னு பயிர் செய்யலாம். வேணுமுன்னா அரசு மானியத்தில, தெளிப்பு நீர், சொட்டு நீர் போன்ற சிக்கன நீர் பாசன கருவிகளை வாங்கி பாசனம் செய்யலாம். அதைவிட ஒவ்வொரு கோடையிலும் -தவறாம தூர்வாரி, ஏரியோட நீர்பிடிப்பு திறன் கொறையாத பார்த்துக்கனும்”

கொடாத்தூர் கிராமத்தில் பசுமை படர்ந்தது. அதை பார்க்க பார்க்க பக்கத்து கிராமத்து மக்களுக்கும் ஆசை வந்தது. வரதராசுபோல் அங்கொரு துரைக்கண்ணு கனவு கண்டுகொண்டிருந்தான்.

காலம் அவனது காதில் சொன்னது... "கவலைவேண்டாம். கனவு மெய்ப்படும்' என்று.
-புதுவைப்பிரபா-

1 comment:

 1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

  http://blogintamil.blogspot.in/2014/11/b.html

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete